பிபின் ராவத் விபத்து – நடந்தது என்ன?

குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத் (63). இவர் நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் தனது மனைவி மதுலிகாவுடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இதில் முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

ஹெலிகாப்டரை சூலூர் விமான படை கமாண்டிங் ஆபீசரான பிரித்வி சிங் சவுகான் இயக்கியுள்ளார்.
ஹெலிகாப்டர் தரை இறங்க குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்பன் சத்திரம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து நொறுங்கி விழுந்தது. சம்பவம் நடந்த இடம் ஊட்டி மெயின் ரோட்டில் இருந்து 2 கிமீ தூரம் உள்ள மலைப்பகுதியில் இருக்கிறது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததை அருகில் உள்ள வனக்கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்து பற்றி உடனடியாகபோலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ராணுவ அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் விரைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கி தீயில் கருகி கிடந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீக்காயம் அடைந்தவர்களை அரை மணி நேரத்திற்கு பிறகே மீட்க முடிந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் தண்ணீர் வசதி கிடையாது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் நொறுங்கி கிடந்த ஹெலிகாப்டரின் பாகத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முடியாமல் திணறினர். தீயணைப்பு வாகனங்களும் அங்கே செல்ல முடியாத மலைப்பகுதி என்பதால், பொதுமக்கள் குடம், பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து ஹெலிகாப்டர் பாகங்களில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து அணைக்க முயன்றனர். ஆனால், தீ 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே
இருந்தது. ஒரு வழியாக சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. தீயில் உடல் கருகி கிடந்தவர்களை மீட்டு துணிகளில் கட்டி மலைப்பகுதியில் இருந்து சமதள பகுதிக்கு கொண்டு வந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒவ்வொருவராக மீட்கப்படும்போது அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு மேலும் அதிகரித்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை 6 மணி வரை ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் கதி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் முப்படை தளபதி பிபின் ராவத்தும், அவரது மனைவி மதுலிகாவும் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களின் பெயர் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குன்னூர் ராணுவ மருத்துவமனையில் ராணுவ பயிற்சி கல்லூரி ஒருங்கிணைப்பு அதிகாரியான கேப்டன் வருண்சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்று வரவேற்று அங்கிருந்து ெஹலிகாப்டரில் அழைத்து வந்தவர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் எரிந்த ஜம்போ ரக ராணுவ ஹெலிகாப்டர் உயரமான இடத்தில் பறக்கவேண்டும். ஆனால் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் சென்றபோது பனி மூட்டம் காணப்பட்டது.

இந்த பனி மூட்டத்தால் மரங்கள் எதுவும் தெரியவில்லை. மலை உச்சியில் இருந்த உயர்ந்த மரத்தின் கிளை மீது ஹெலிகாப்டர் மோதி பின்னர், வேகமாக கீழே இறங்கி 5 முதல் 6 மரங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் கீழே விழும் முன்பே இரண்டிற்கும் மேற்பட்ட பாகங்களாக உடைந்து சிதறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் இயக்கும் தகுதியில் இருந்ததா? அதை பயன்படுத்த அனுமதி வழங்கிய ராணுவ அதிகாரி யார்? தொழில்நுட்ப குழுவின் ஒப்புதல் இல்லாமல் அபாயகரமான பனி மூட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி இயக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த உயர் மட்ட விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்திய விமானப்படை உயரதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி கள ஆய்வு மேற்கொண்டனர்.

முப்படை முதன்மைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணச்செய்தியை அறிந்த அனைத்துத் தரப்பு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்ள்.

Leave a Response