பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு – ஒன்றிய அரசு அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 ஐத் தாண்டியது.

வரலாறு காணாத விதமாக மத்திய பிரதேச உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120 ஐ தொட்டது. இதே போல, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.100 ஐ தொட்டது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்தன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் கூட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், ஒன்றிய அரசும் குறைக்கவில்லை.

சாமானிய மக்களின் சிரமத்தைக் குறைக்க, தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் குறைந்தாலும், அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் மீண்டும் ரூ.100 ஐ தாண்டியது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 31 நாளில் 24 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்தால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் 26 நாளில் ரூ.8.20 ம், டீசல் 8.65 ம் விலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி, தொழில் சுணக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப் பிரச்னையாக வெடித்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, பெட்ரோலுக்கான கலால் வரியில் ரூ.5 ம், டீசலுக்கான கலால் வரியில் ரூ.10 ம் ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

இந்த உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று அதிகாலையில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நேற்று 2% குறைந்ததைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கலால் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Response