எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் கருத்து – அரசியலில் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகிலுள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கிறது.

இதையொட்டி அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக கட்சி சார்பில், வழங்கிய சுமார் பதிமூன்றரைக் கிலோ தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க ஆஃப் இந்தியாவிலுள்ள லாக்கரில் இருந்து எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வங்கியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு எடுக்கப்பட்ட தங்கக் கவசம் பசும்பொன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கமாகவே இன்றளவும் உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். தற்போது பொறுப்பிலுள்ள திமுக அரசு எந்தத் திட்டங்களையும், நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கடந்த அதிமுக அரசின் திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம்.

அம்மா உணவகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த உணவுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டைத் தலைமையின் கீழ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்”.

அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்எமையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விமர்சித்த நிலையில், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றார். மேலும் அதிமுக தொண்டர்கள் முதல் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response