தமிழ்நாடு வேலைகள் தொழில் வணிகம் தமிழருக்கே – ததேபே போராட்டம்

தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் ஆகியவை தமிழருக்கே உறுதி செய்து, தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றக் கோரி இன்று (22.10.2021) சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மிகவேகமாக அயலார் மயமாகி வரும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதனை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றது. இந்நிலையில், தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு தமிழ்நாட்டின் தனியார் துறைகளில் 75 விழுக்காடு தமிழருக்கே என்ற கோரிக்கையை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை என்ற அறச்சீற்றத்தோடு இப்போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்தது.

1.தமிழ்நாடு அரசுத் துறை, தமிழ்நாடு அரசின் தொழில் – வணிகத்துறை அனைத்திலும் நூறு விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும்,

2.தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், அதன் தொழில் – வணிக நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் வேலையில் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்,

3.தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்,

4.தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை பெற்றுத் தரவும் – தமிழ்நாட்டுத் தொழில் முனைவோர்க்குக்குத் தொழிலாளிகளைத் தரவும் “தமிழர் வேலை வழங்கு வாரியம்” அமைக்க வேண்டும்,

5.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை கிடைக்காமல் துன்புறுவோர்க்குத் தமிழ்நாடு அரசு வாழ்வூதியம் வழங்க வேண்டும்,

6.தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்க்கும், தொழில் – வணிக நிறுவனங்களுக்கும் மானியங்கள் உட்பட ஊக்குவிப்புத் திட்டங்களையும் பல சலுகைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்,

7.வெளி மாநில – வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம், நிலம், வரி போன்றவற்றில் அளிக்கும் சலுகைகளை நீக்க வேண்டும்,

8.வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் – வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு உரிமம் வழங்கக் கூடாது, அவர்கள் சொத்துகள் வாங்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்,

9.மிசோரம் – நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வெளி மாநிலத்தவருக்கு வரம்புகட்ட நடைமுறையில் உள்ள உள் அனுமதி அதிகாரம் (Inner Line Permit) தமிழ்நாடு அரசுக்கு வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

சென்னை பாரிமுனை – கடற்கரைச் சாலை சந்திப்பிலுள்ள பாரிமுனை கட்டடத்தின் கீழே நடைபெற்ற இப்போராட்டத்தில், ஆண்கள் – பெண்கள் – குழந்தைகள் என கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழருக்கே”, “தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!”, “தமிழ்நாட்டுக்கு உள் அனுமதி அதிகாரம் வேண்டும்”, “வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே” என்பன போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன் முன்னிலை வகித்தார். மகளிர் ஆயம் தலைவர் அருணா, தலைமைச் செயற்குழு க.முருகன், வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, மு.தமிழ்மணி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். தலைமைச் செயற்குழு நா.வைகறை கோரிக்கை முழக்கங்களை உணர்ச்சி பொங்க எழுப்பினார்.

போராட்டத்தில், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு பூதலூர் பி.தென்னவன், குடந்தை க.விடுதலைச்சுடர், திருச்சி வே.க.இலக்குவன், திருத்துறைப்பூண்டி தை.செயபால், புதுச்சேரி இரா.வேல்சாமி, பொதுக்குழு புளியங்குடி க.பாண்டியன், ஈரோடு வெ.இளங்கோவன், சிதம்பரம் ஆ.குபேரன், மதுரை சிவா, கோவை விளவை இராசேந்திரன், சீர்காழி செ.அரவிந்தன்,இராணிப்பேட்டை செயலாளர் பேராசிரியர் ஆனந்தி, செய்யாறு செயலாளர் இராசவேந்தன், குமாரபாளையம் வெ.ஆறுமுகம், தருமபுரி முருகேசன் உள்ளிட்ட பேரியக்கச் செயல்பாட்டாளர்களும் நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமை மீட்புக் குழு உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி சமூக வலைத்தளங்களில் #தமிழ்நாடுவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய குறிச்சொற்களோடு சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இக்குறிச்சொற்களோடு பதிவிட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் – முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் இரா.இராம்பிரதீபனை நேரில் சந்தித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு க.அருணபாரதி, வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, க.முருகன் ஆகியோர் இதனை நேரில் வழங்கினர்.

Leave a Response