முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் விவரம் – அரசியலரங்கம் அதிர்ச்சி

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இலஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும், சென்னை வீடு உள்பட 43 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, விஜயபாஸ்கர் தன் மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாகவும், இலஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. சுமார் 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது….

ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று வாங்கியுள்ளார்.

ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் ரூ. 28 கோடிக்கு பல நிறுவனங்களில் முதலீடு செய்டுள்ளார். அதுமட்டுமல்லாது, காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.

அதேபோல், சென்னை தி.நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். மேலும் தனது சொந்த ஊரில் உள்ள வேலைகளுக்கு ரூ.6.6 கோடிக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி ஆகியவை வாங்கியுள்ளார்.

இந்நிலையில், வருமான வரித்துறை கணக்கின் படி, கடந்த 5 ஆண்டில் விஜயபாஸ்கரின் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. ஆனால் 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளதாகவும்கூறப்படுகிறது.

இதில் விஜயபாஸ்கரும், மனைவி ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். ஆனால், அவர்கள் வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதல்தகவல் அறிக்கை குறித்த தகவல்கள் அரசியலரங்கில் பலத்த வியப்புகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response