அண்ணா திமுக நண்பர்களுக்கு ஓர் எழுத்தாளரின் திறந்த மடல்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது. இதையொட்டி அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம் அதிமுகவினருக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.

அதில்….

அண்ணா திமுக நண்பர்களே !

உங்கள் பொன்விழாவை முன்னிட்டு உங்களுக்கு விவேகானந்தர் சொன்ன கதையைச் சொல்லட்டுமா ? பெரியார் சொன்னது,அண்ணா சொன்னது,எம்ஜிஆர் சொன்னது எல்லாம் உங்க தலைமைக்கு காவியில் மூழ்கிய இபிஎஸ் /ஒபிஎஸ்க்கு எட்டிக்காயாகக் கசப்பதால் விவேகானந்தர் சொன்ன கதை சொல்கிறேன்!

பசியோடு ஒரு நிறைமாத சிங்கம் ஆட்டை அடிக்கப் பாயும் போது ஒரு சிங்கத்தை ஈன்றுவிட்டு அங்கேயே உயிர் விட்டுவிட்டது. ஆடுகள் பார்த்தன. இதுவும் வளர்ந்தால் நமக்கு எதிராகத்தானே பாயும்! எனவே நாமே எடுத்து ஆடுபோல் வளர்ப்போம் என முடிவெடுத்தன.

ஆட்டுப்பால் கொடுத்தது. புல் மேயக் கற்றுக் கொடுத்தது. ம்மே என ஆடுபோல் கத்தக் கற்றுக் கொடுத்தது.சிங்கக் குட்டியும் அப்படியே வளர்ந்தது.புலியைக் கண்டால் ஓடியது.புலி இந்த அதிசயத்தைப் பக்கத்துக் காட்டு சிங்கத்திடம் சொன்னது.சிங்கம் நம்ப மறுத்துப் பார்க்க வந்தது.

சிங்கத்தைப் பார்த்ததும் மற்ற ஆடுகளோடு இந்தச் சிங்கக்குட்டியும் ஓடியது.பார்த்த சிங்கம் விடாமல் துரத்தி குட்டியைப் பிடித்துவிட்டது.

சிங்கம் கேட்டது, “ ஆடுகள் ஓடின.சரி. நீ சிங்கக் குட்டி………… நீ ஏன் ஓடுகிறாய்?”
சிங்கக் குட்டி சொன்னது , “ ஐயையோ நானும் ஆடுதான்… சிங்கம் பொல்லாதது…. எங்க எதிரி !…..”
சிங்கம் சிங்கக் குட்டியை இழுத்துக் கொண்டு போய் ஒரு கிணற்றில் தன் முகத்தையும் அதன் முகத்தையும் காட்டியது.

“ ஆமாம்.நான் உன் போல்தான் இருக்கிறேன்…” சிங்கக்குட்டி சொன்னது.

“ என்னைப் போல் உன்னாலும் கர்ஜிக்க முடியும் என சிங்கம் வலியுறுத்த குட்டி முயற்சித்தது…கடைசியாக கர்ஜித்தேவிட்டது.

“ நீ சிங்கக் குட்டி உன் பலத்தை அறியவிடாமல் உன்னை முடக்கி தங்களோடு வைத்துக் கொண்டது உன் மீதான கருணையினால் அல்ல உன்னை அடிமையாக்கத்தான்…”

சிங்கக்குட்டி விழித்துக் கொண்டது.

அ இ அ தி மு க நண்பர்களே !

பாஜகவும் மோடியும் உங்களை அணைத்தது உங்களை வாழவைக்க அல்ல.

திமுக vs பாஜக என அரசியல் களத்தை மாற்றவே அந்த சதித்திட்டம். ஆம் அதன் மூலம் அதிமுகவை அரசியல் களத்தைவிட்டே அகற்றுவதுதான் அவர்கள் அஜெண்டா.அதற்கே சங்பரிவார் கடுமையாக முயற்சிக்கிறது. ஆடு அண்ணாமலை கர்ஜிக்க முயலுகிறார்.ம்மே என்றே கத்தல் மட்டுமே கேட்கிறது.

நீங்கள் அந்த சிங்கக் குட்டிபோல் விழித்தெழாவிடில் ஆடுகளுக்கே கொண்டாட்டம். தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு !
அதிமுகவினரே ! பாஜகவை தலை முழுகுங்கள் ! உங்களின் சுய அரசியல் முகத்தை உயர்த்துங்கள் !
இங்கே ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் சமூகநீதி பேசட்டும் ! மதச்சார்பின்மை பேசட்டும் ! பெரியார் ,அண்ணாவை தூக்கிப் பிடிக்கட்டும் ! மாநில உரிமை,தமிழின் உயர்வு,மாநில மதிப்பு, சுயமரியாதை ஓங்கட்டும் !

செய்வீர்களா ! செய்வீர்களா ! செய்வீர்களா !

சுபொஅ.
18/10/2021.

Leave a Response