நாம் ஒன்றாக வேண்டும் – ஓபிஎஸ் இபிஎஸ்ஸுக்கு சசிகலா அழைப்பு

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சென்னை திரும்பிய சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சசிகலாவின் இந்த திடீர் நடவடிக்கை அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், சசிகலாவிற்கு எதிராக மாவட்டம் தோறும் பொதுக்குழுக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு இடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜெயலலிதா நினைவிடம் சென்றார். அதிமுக கொடியை ஏந்தி பலரும் சசிகலாவிற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், அதிமுக பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இன்று காலை சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர், ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.

அப்போது பேசியதாவது…

அதிமுகவை காலம் முழுக்கக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரமிது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும். நமக்குத் தேவை ஒற்றுமைதான். நீரடித்து நீர் விலகாது.

என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நெருக்கடிகள் என்னைச் சூழந்த போது கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுத்தான் சென்றேன்.

அதிமுக நிர்வாகிகள் நம்மைக் கடுமையாக விமர்சிப்பது போல், நாம் அவர்களை விமர்சிக்கக் கூடாது. மக்கள் நலன், தொண்டர்கள் நலனில் அக்கறை காட்டாவிட்டால் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட்ட போது ஜானகி அம்மாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு அதிமுக ஒன்றானது.

இவ்வாறு அவர் பேசினார்.

அனைவரும் ஒன்றாக வேண்டும் என சசிகலா அழைப்பு விடுத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response