புலவர் புலமைப்பித்தன் மறைந்தார்

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும் அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவருமான புலவர் புலமைப்பித்தன் இன்று காலை ஒன்பதரை மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 86.

உடலநலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1935 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் இராமசாமி.

1964 ஆம் ஆண்டு திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அதோடு சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

1968 இல் வெளியான குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய, நான் யார நான் யார் என்ற பாட்டின் மூலம் மிகவும் புகழ் பெற்றவர்.அதைத் தொடர்ந்து அவர் எழுதிய எல்லாப்பாடல்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றவை.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனால்,அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு தமிழக அரசின் பெரியார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response