தாழ்த்தப்பட்டோர் உட்பட 58 பிற சாதியினர் அர்ச்சகர்களாக நியமனம் – வரலாற்றுச் சாதனை என மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு

திமுக அரசு பொறுப்பேற்று இன்று நூறாவது நாள். இந்நாளில் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது

அதற்கு முன்பாக மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது திமுக அரசு.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் 24 பேர் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ள நிலையில், அந்த 24 பேர் உட்பட 58 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆர்.டி.எம். புரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது, தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து, வரலாறு படைத்த மு.க.ஸ்டாலின் அரசு, தமிழ்நாட்டில் முதல் முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிற திருக்குறளுக்கேற்ப செயல்படும் அரசு எனப்பலர் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பணியாற்றும் முதலமைச்சரை மனதாரப் பாராட்டலாம்; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கனவு இன்று நனவாகி இருக்கிறது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Leave a Response