திமுக அரசு செய்வது சரியல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

சனவரி 26 குடியரசு நாள், மே 1 உழைப்பாளர்கள் நாள், ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், அக்டோபட் 02 காந்தி பிறந்தநாள் ஆகிய நாட்களில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இக்கூட்டங்களில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை முன்வைப்பார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால், இந்தாண்டு சுதந்திர நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக வரும் 15 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பஞ்சாயத்து தலைவர்களுக்கு இது குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருட்டிணன் தன் ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பாதுகாப்பு விதிகளைக் காரணமாகச் சொல்லி, கிராம சபைக் கூட்டங்களை இரத்துச் செய்வது சரியல்ல. உரிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, கிராம சபைக் கூட்டங்களை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தத் தடை விதித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Response