மதுசூதனன் சிகிச்சை செலவு சர்ச்சை – ஓபிஎஸ் இபிஎஸ் கையெழுத்தில்லாமல் வெளியான செய்திக்குறிப்பு

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பல நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு காலமானார்.

அப்போது, அவருடைய மருத்துவச் செலவுத் தொகையைக் கட்ட இயலாமல் மதுசூதனன குடும்பத்தினர் தவித்தனர் எனவும், அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை எனவும் சொல்ல்ப்பட்டது. அந்நிலையில், சசிகலாதான் சுமார் ஐம்பது இலட்சம் தொகையைக் கட்டி அவாது உடலை மீட்டார் என்றும் சமூகவலைதளங்களில் செய்தி பரவிவந்தது.

கடந்த சில நாட்களாக இச்செய்தி உலாவந்த நிலையில் இன்று மாலை ஆறு மணியளவில், அதிமுக தலைமைக்கழகம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்..

அனைத்திந்திய அண்ணா திமுகழக அவைத்தலைவரும் கழகத்தின் மூத்த முன்னோடியுமான மரியாதைக்குரிய இ.மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5.8.2021 அன்று மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில், திரு இ.மதுசூதனன் அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவுத்தொகை 26,74,063 ரூபாயை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கணக்கில் இருந்து நேற்று (10.08.2021 – செவ்வாய்க்கிழமை) அப்பல்லோ மருத்துவமனைக்குச் செலுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்குறிப்பில் யாருடைய கையெழுத்தும் இல்லை அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஒப்புதலோடு இச்செய்தி வெளியிடப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response