மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை – அமைச்சர் அறிவிப்பு

சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பாஜக தலைவர்களே, திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி ‘வசை பாடியவர்கள் கூட வாழ்த்தும் நிலை’ ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகளும் வைக்க உள்ளோம்.

முதல்கட்டமாக வரும் வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண்கள் தகவல் பலகையில் குறிப்பிடப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோயில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோயில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது.

அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இனி அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குப் பிறகு கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response