கன்னடருக்கு இங்கு என்ன வேலை? – தெலுங்குத்திரையுலகில் பிரகாஷ்ராஜுக்கு எதிர்ப்பு

மா என்றழைக்கப்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு, நடிகைகள் ஜீவிதா ராஜசேகர், புஷ்பா, நடிகர் நரசிம்மராவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவு கொடுத்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அனைவருமே திரைப்பட உலகில் இருப்பதால், சிரஞ்சீவியின் ஆதரவைப் பெறுபவரே வெற்றி பெறுவார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ், சிரஞ்சீவியைத் (பெயரை குறிப்பிடாமல்) தாக்கிப் பேசியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கன்னட நடிகர் சங்கத்தில் அவர் போட்டியிடட்டும். இங்கே போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. தெலுங்குப் பட உலகைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்று புரியவில்லை. அவர்கள் நினைத்தால், போட்டியே இல்லாமல் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

அப்படி ஒருமனதாக தேர்ந்தெடுப்பதை மூத்த நடிகர்கள் விரும்பவில்லை போலும். தெலுங்கு நடிகர் சங்கத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும். தெலுங்குப் பட உலகில் பிரபலமாக இருக்கும் ஒருவர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் தனது ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும்

இவ்வாறு கோட்டா சீனிவாசராவ் பேசியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்தபோது அவருக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. கலைக்கு மொழியில்லை என்று ஆதரித்தார்கள்.அதேசமயம் நிர்வாகம் பொறுப்பு என்று வரும்போது மொழியுணர்வு வந்துவிடுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது.

Leave a Response