பூலித்தேவன் வரலாறு தெரியாமல் பேசும் தெலுங்குநடிகர் – சாட்டையடிப் பதிவு

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.

இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குரல்மாற்று செய்யப்பட்டு தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

அதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சிரஞ்சீவி.

அப்போது அவர் வரலாறு தெரியாமல் பேசியதை அம்பலப்படுத்தும் பதிவு….

தெலுங்கில் உருவாகியிருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் தமிழ் வெளியீட்டுக்கான விளம்பர நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 28) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்தப் படத்தின் நாயகன் சிரஞ்சீவி அவர்கள், நரசிம்மா ரெட்டி வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் போரிட்டவன் என்று கருத்து தெரிவித்தார்.

அதாவது, சிப்பாய்க் கலகத்திற்கு முன்பே வெள்ளையாரை எதிர்த்துப் போரிட்ட சில வீரர்களின் பெயரைச் சொல்லி, அதற்கு முன்பாகவே இவர் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற கருத்தைப் பதிவு செய்தார்.

நண்பர்களே உண்மை அதுவல்ல…

ஏற்கனவே, ‘பழசிராஜா” என்கிற படம் மலையாளத்தில் உருவாகி அந்தப் படம் தமிழிலும் வெளியானது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பழசிராஜாவாக நடித்திருந்த மம்முட்டி அவர்களும், முதல் சுதந்திரப் போராட்ட வீரர் பழசிராஜா என்ற கருத்தைக் கூறினார்.

ஆனால், அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது அவருடன் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.

அப்போது வெள்ளையரை எதிர்த்து 1767 வரை களத்தில் நின்றவர், தமிழ் மன்னர் பூலித்தேவன். அவர்தான் முதல் சுதந்திரப் போராட்டவீரர்.

அவருக்குப் பிறகு, சின்ன மருது பெரிய மருது காலகட்டத்தில் 1793 ல் நின்றவர் பழசிராஜா என்று அவரிடம் தெரிவித்த போது, அப்படியா, கேரளாவில் அவர் முதல் வீரர் என்று மாற்றிக் கொண்டார் மம்மூட்டி.

இப்போது நரசிம்ம ரெட்டி முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்று இங்கே பதிவு செய்திருக்கிறார் நம்முடைய சிரஞ்சீவி. ஆனால், நரசிம்ம ரெட்டியின் காலம் 1847.

1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து 17 முறை போரில் நின்றவர், பூலித்தேவன். இதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை ஓடஒட விரட்டி அடித்த மாவீரன் பூலித்தேவன். வெள்ளையரை எதிர்த்த முதல் வீரரும் அவர்தான். முதலில் திருப்பி அடித்தவரும் இவர்தான்.

ஆகவே, எழுதுகின்ற நம்ம சினிமா பத்திரிகை நண்பர்கள் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் யார் என்பதை நீங்கள் இணையதளத்தில் போய்த் தெரிந்து கொண்டு அதன் பிறகு எழுதுங்கள்.

இந்த மண்ணிற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் மதிப்போம். அதே நேரத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் யார் என்பதையும் மனதில் ஏந்துவோம்.

நன்றி
என்றும் உங்கள் அன்பிலே.
ஜி பாலன்

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response