காவல்துறையை விட்டு இரசிகர்களை விரட்டிய விஜய் – பிறந்தநாளில் சம்பவம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவர், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு அவரது இரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வசீகரமான நடிப்பால் தமிழ் இரசிகர்களின் பேரன்பைப் பெற்றவர்; என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய்த் திகழும் அண்ணன் தளபதி விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ஏராளமான இரசிகர்கள் குவிந்தனர்.அவர்கள் திடீர் என நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணாவில் ஈடுபட்ட விஜய் இரசிகர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

விஜய் வீட்டிலிருந்து வெளியே வரவேயில்லை.

Leave a Response