தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என திமுக வாக்குருதி கொடுத்தது. ஆனால், வரி வருவாயில் பெருமளவை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்வதால் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பது தற்போது சாத்தியமல்ல என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது…..
மிகவும் இக்கட்டான பொருளாதாரச் சூழலில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. ஆளுநர் உரை முடிந்ததும் அடுத்த 2 வாரத்துக்குள் தமிழகஅரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகும்.தமிழ்நாட்டின் நிதிநிலைமை நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் மோசமாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியது. இதன்மூலம் 2019-20-ல் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த ரூ. 2 இலட்சத்து 40 ஆயிரம் கோடி வரி வருவாய் 2020-21-ல் ரூ.3 இலட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதாவது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரூ.336 கோடி குறைந்துள்ளது.
இந்த ஆண்டு மேலும் சில மாற்றங்களை செய்துள்ளதால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதி இன்னும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தால் யாரோ செய்யும் தவறுக்கு ஆதரவு கொடுப்பதுபோல ஆகிவிடும்.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்தபோது பெட்ரோல் இலிட்டர் ரூ.69 ஆக இருந்தது. இதில் மாநிலங்களுக்கு ரூ.14.47 கிடைத்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 44 டாலராக குறைந்தும், இலிட்டர் ரூ.98 ஆக உள்ளது. இதில் ரூ.23 தமிழக அரசின் வரியாகும். இதேபோல ஒரு இலிட்டர் டீசல் விலை ரூ.92. இதில் தமிழக அரசின் வரி ரூ.17 மட்டுமே. ஒன்றிய அரசின் வரி விதிப்பால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தார்கள். 2006-11 திமுக ஆட்சியிலும் வாட் வரி குறைக்கப்பட்டது. மறைமுக வரியைக் குறைத்தால்தான் சாமானிய மக்கள் பயன்பெறுவார்கள் என்பதால் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியிலும், முந்தைய அதிமுக ஆட்சியிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நிலை மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு வரிகள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் சதவீதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க முடியவில்லை. பொருளாதார நிலைமை மேம்பட்டதும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம். வாட் வரியைக் குறைப்போம்.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தாங்கள் சொல்கிறபடிதான் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு நினைக்கிறது. வளர்ந்த மாநிலம் என்று சொல்லி தமிழகத்துக்கான நிதிப் பகிர்வை மத்திய அரசு குறைத்து வருகிறது.
டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தின் சொந்த வருவாய், மொத்தஉற்பத்தியில் 15 சதவீதம் வரை இருந்தது, 2014-க்குப் பிறகு சரிந்து சரிந்து 6 சதவீதமாக உள்ளது. ஜிஎஸ்டி வரி முழுமையாக வசூலாகாமல் உள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்தால் நிதி நிலைமை மேம்படும். இதனை ஒரே மாதத்தில் செய்ய முடியாது. வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.