ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் இப்படி எடுத்ததற்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமெனவும் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கு இயக்குநர் சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அவருடைய பதிவில், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.
என்று கூறியிருக்கிறார்.
இப்பதிவைக் குறிப்பிட்டு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,
தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழர்களின் போராட்டத்தை, வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதை தம் கலைப்படைப்பாக மாற்றியிருக்கும் வக்கிரத்தை தோழர் இயக்குநர் சேரன் கண்டித்திருக்கிறார். இச்சீரழிவுப் படைப்பின் எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்.
என்று கூறியுள்ளார்.