இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம், இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் எனக்கோரி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்துவரும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றினை பிரிட்டன், கனடா, செர்மனி உட்பட சில நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரவிருக்கின்றன.

இத்தீர்மானத்திற்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் வாக்களிக்கும்படி பல்வேறு நாடுகளை இலங்கை அணுகியுள்ளது. வழக்கம்போல சீனா, பாகிசுதான் ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய அரசும் ஆதரவுத் தெரிவிக்க உறுதி கூறியுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் அறிவித்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முடிந்த பிறகு, ஐ.நா. மனித உரிமைக் குழு நிறைவேற்றிய பல தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இந்த நிலையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கூடவிருக்கும் ஐ.நா.மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இணைந்து கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளிலிருந்து அவர்களைக் காக்க முன்வரும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response