வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் – கமல் கட்சி சிக்கியது

தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது.
பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவை அமைத்து, மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதைக் கண்காணிக்க மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.

அதன்படி இந்தக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். நேற்று நில எடுப்பு தனி வட்டாட்சியர் விஜயா,காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்,தலைமைக்காவலர் வில்வேந்திரன்,காவலர் சின்ராஜ் ஆகியோர் அடங்கிய நிலையான கண்காணிப்புக் குழுவினர் கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த சிறுசுமையுந்தை கண்காணிப்புக் குழுவினர் மறித்து சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் டீ சர்ட்டும், மற்றொரு 3 மூட்டைகளில் சில்வர் பாத்திரங்களும் இருந்தது. டீ சர்ட்டில் முன்பக்கம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவமும், டார்ச் லைட் சின்னமும் இடம் பெற்றிருந்தது. பின் பக்கம் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சோமநாதன் என்பவரின் படமும், டார்ச் லைட் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இதை ஏற்றி வந்த ஓட்டுநரான லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரிடம் கண்காணிப்புக் குழுவினர் விசாரித்த போது, அதை அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஏற்றிச் செல்வதாகத் தெரிவித்தார். தனக்கு வாடகையாக ரூ.700 தருவதாகப் பேசி சம்பந்தப்பட்ட நபர் பொருட்களை எடுத்து வரச்சொன்னதாகவும், உள்ளே என்ன பொருட்கள் இருந்தன என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்பின் அவற்றைப் பறிமுதல் செய்த குழுவினர், அதை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பலராமனிடம் ஒப்படைத்தனர். இது பற்றி தொடர்ந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகத் தான் இந்தப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கிறார்கள் என்று கமல் குற்றம் சொல்லிவந்தார். இப்போது அவர் கட்சியே இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதால், நீங்களும் இப்படித்தானா? என்று அவரை விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Response