சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவது ஏன்? அடுத்து என்ன செய்யப் போகிறார்? – வழக்குரைஞர் சொல்லும் புதியதகவல்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையில் இருந்த இளவரசி நேற்று விடுதலை ஆனார்.

இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார்.
சிறையின் முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது….

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகி உள்ளனர். சுதாகரனுக்கு அபராதத் தொகையை ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி உள்ளது. விரைவில் சுதாகரன் சார்பில் அபராதத் தொகை செலுத்தப்படும். அவரும் கூடிய விரைவில் விடுதலை ஆவார்.

சிறையில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆன போது அவர்களுக்குச் சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தைச் சான்றிதழில், 2 பேரின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் சிறையில் தோட்ட வேலைகளைச் செய்வது மற்றும் கன்னடத்தைப் படித்துத் தேறி உள்ளனர். இதற்காகவும் அவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வின் கொள்கைகள் மற்றும் விதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டும் தான் கட்சிக் கொடியை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது தான் சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் சசிகலா காரில் அ.தி.மு.க. கட்சிக் கொடியைக் கட்டிச் சென்றதும், அவர் அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதும் தவறு இல்லை.

சசிகலா அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தியதால் என்ன சர்ச்சை உருவானது? ஆரம்பத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர்கள், சசிகலா அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தியது பற்றி எதுவும் கூறவில்லை. சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் கூறவில்லை.

சசிகலா அ.தி.மு.க உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்று கூறியுள்ளனர். அவர் சிறையில் இருக்கும் போது எப்படி இது முடியும்?. அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். அவர் விரைவில் மக்களைச் சந்திக்கவும் உள்ளார்.

சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதைப் பதற்றமாக எடுத்துக் கொள்ளாமல் அ.தி.மு.க.வினர் அதை பிரபலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும். உள்கட்சி பிரச்சினைக்குள் தேர்தல் ஆணையம் செல்லாது என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response