அய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்

தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு அந்த இடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பௌத்த வழிபாடுகளுடன் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஆலயம் இருந்ததாகத் தெரிவித்து இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.செங்கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன ஜெயவர்த்தன புர தொல்லியல் பீடம், இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை செய்யுமாம்.

தண்ணிமுறிப்பு குளத்துக்கு அண்மையாகவுள்ள படலைகல்லு என்னும் இடத்திலும் இன்னுமொரு விகாரைக்கான தொல்லியல் அகழ்வுகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந்த இடம் கல்யாணபுர என அடையாள படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத்திலுள்ள பாரம்பரிய தமிழ் நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் செயல் தீவிரமாக நடைபெற்றுவருகிறதென்றும் அதன் ஒரு பகுதிதான் இதுவென்றும் தமிழர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Leave a Response