தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது

“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், 2021 சனவரி 20 அன்று “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் – வள்ளலார் பெருவிழா” – சிதம்பரத்தில் நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில்….

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் இணைந்து நடத்தும் இவ்விழா நாளை (20.01.2020) அறிவன் (புதன்) கிழமை மாலை 5 மணிக்கு சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் செல்லியம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது.

விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார். கீரப்பாளையம் இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் ஞான.சுந்தரபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க பரதூர் செயலாளர் பொன்னிவளவன் வரவேற்புரை ஆற்றுகிறார். தயவுத்திரு பிரேமா திருவருட்பா ஓதல், சிதம்பரம் தற்காப்பு பயிற்சிப் பள்ளி ஆசான் இரா.எல்லாளன் ஒருங்கிணைப்பில் மாணவர்களின் மல்லர்கம்பம் – சிலம்பம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

வள்ளலார் வழியில் தொடர் தொண்டாற்றிவரும் அன்பர்களுக்கான “வள்ளலார் திருத்தொண்டர்” விருதை கீரப்பாளையம் தயவுத்திரு நா.நல்லதம்பி பெறுகிறார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்ரமணிய சிவா நோக்க உரையாற்றுகிறார்.

கற்ப சித்தர் நாகவேல், தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராசன், புதுக்கோட்டை மேலை சிவப்புரி கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் தா.மணி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விழா நிறைவுரையாற்றுகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் காட்டுமன்னார்குடி நகரச் செயலாளர் சிவ.அருளமுதன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர். நிறைவில் கீரப்பாளையம் இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் முன்னணி செயல்ப்பாட்டாளர் வே.இளவரசன் நன்றி நவில்கிறார்.

இவ்விழாவில், வள்ளலார் அன்பர்களைம், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கிறோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response