இறங்கி வந்த பாசக – எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றது

தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை பாசக ஏற்கவில்லை.
தமிழக பாசக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்து, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம் தான் அறிவிக்கும் என்றும் கூறிவந்தனர்.

இந்நிலையில், திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாசகவின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று (சனவரி 11) சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மவுனமடத்தில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் சி.டி.ரவி அளித்த பேட்டியில்….

தமிழகத்தில் பாசவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். தமிழக மக்கள் நலனில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்குச் செய்து வருகிறார். தமிழக மக்களுக்கு உண்மையாக நாங்கள் நடந்து கொள்கிறோம். தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி. கூட்டணி பெரும்பான்மை அதிமுக என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய பாசக எண்ணுவதால் தமிழக மக்களிடம் பாசவுக்கு ஆதரவு இருக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அமித்ஷாவின் முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை முதல்வர் வேட்பாளரை எங்கள் மேலிடம் அறிவிக்கும் என்று சொல்லி வந்த பாசக இப்போது முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response