திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானஆ.ராசா அவர்களின் சவாலை ஏற்க மறுத்து தகுதியற்றவர் என இழிவாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்….
ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் படத்தினை வைத்துக் கொண்டு தவழ்ந்து தவழ்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டும் எல்லாம் தெரிந்தால் போல் பத்திரிக்கைகள முன்பு கடந்த மூன்றாம் தேதி பத்தாம் பசலித் தனமாக உளறிக் கொட்டி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இப்படி உளறிக் கொட்டுவதை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு சிபிஐ தனி நீதிமன்றத்தால் 2ஜி வழக்கில் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபணமில்லை என்கிற தீர்ப்பினை படிக்கக் கேட்டு தெரிந்து கொள்ளாததனால் இன்று ஊழல் ராணி என்று போற்றப்படும் ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை பேசுவதற்கு வழி செய்து விட்டார் எடப்பாடி.
சட்டரீதியிலான விடுவிக்கப்பட்ட 2 ஜி வழக்கிற்கு கண்ணியமான முறையில் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் ஒரு தர்க்க ரீதியிலான நேரடி சவாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடந்த 3-12-2020 அன்று விடுத்திருந்தார்.
இந்த நேரடி சவாலினை எதிர்கொள்ள திராணியில்லாமல் கடந்த மூன்று நான்கு தினங்களாக கருத்தியல் சித்தாந்தம் இல்லாத அரைவேக்காட்டு அமைச்சர்கள் ”தகுதியில்லை என்பதும், அருகதை இல்லை என்பதும், ராசா என்ன பெரிய ஆளா ” என்று கூறுவது ஆணவம் அதிகாரம் என்பதைக் காட்டிலும் பார்ப்பனியத்தின் வர்ணாசிரம பிறப்பை சொல்லுகின்ற சாதி வெறி தலைக்கேறிய தாக்குதல் என்பதகவே அமைச்சர்களின் பேச்சுக்களிலிருந்தே தெளிவாகிறது.
இந்தியாவையே ஒரு அமைச்சகத்தின் கீழ் ஆளுமை செய்த ஆ.ராசா அவர்களைப் பார்த்து “என்னுடன் சவால் விடும் அளவிற்கு ராசா ஒன்றும் தகுதியானவர் கிடையாது அவரின் பின்புலம் என்ன என்று அவர் பிறப்பைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் ” என்று அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்ட முதல்வரான எடப்பாடியின் பேச்சு மிகவும் கண்டிக்கத் தக்கது.
ஒரு மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணியமான முறையில் ஒரு நேரடியான சவாலை விடுக்கிறார் என்றால் அதை சட்ட ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தீண்டாமை உறுதி மொழி ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் இப்படி சாதிய இறுமாப்போடு தனித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா அவர்களை தரக்குறைவாக கூறுவதென்பது ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிய வன்மமே தவிர வேறொன்று மில்லை.
இதை பட்டியலின மக்களின் சார்பாக வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தியாவில் வாழ்கின்ற பட்டியலின பழங்குடி மக்களில் தமிழகத்தில்தான் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வு மேம்பட்டு இருக்கிறது என்பதையும் தமிழகத்தில் தான் பட்டியலின மக்கள் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நடக்கின்றனர் என்றாள் அதற்கு அடிப்படை காரணம் திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்கள தந்தை பெரியார் அறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் அவர்கள்தான் என்பதை பட்டியலின பழங்குடி மக்கள் அறிவார்கள்
வேண்டுமென்றே திமுக மீதும் ஆ.ராசா அவர்கள் மீதும் அவதூறையும் பழியையும் சுமத்துவது ஆதிக்க எண்ணத்துடன் சேற்றை வாரி வீசுவதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதிமுக அமைச்சர்களும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அண்ணா திமுக ஆட்சியின் அந்திம காலத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல தான் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கிறது
ஆ.ராசா அவர்களின் சவாலையும் விவாதத்தை ஏற்க துணிவில்லை திராணியில்லை என்பதையே தமிழக முதல்வர் மற்றும் அவரின் அமைச்சர்கள் உடைய பேச்சும் நடவடிக்கையிலும் வெளிப்படுகிறது
அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதி ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் அந்த மாண்பை மீறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆ ராசா அவர்கள் மீதான தனிநபர் தாக்குதலுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள்பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒன்றரை கோடிக்கு மேலே இருக்கக்கூடிய பட்டியலின பழங்குடி மக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அண்ணா திமுக அரசை புறக்கணிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அதற்கான பிரச்சாரப் பணிகளை ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
– இரா.அதியமான்.
நிறுவனர் தலைவர்.
ஆதித்தமிழர் பேரவை.
12-12-2020
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.