கமலஹாசனின் திமிர்த்தனம் – அ.மார்க்ஸ் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கமலைக் கண்டித்துப் பேசி வருகிறார்கள்.

பேராசிரியர் எழுத்தாளர் சமுதாயச்செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட அ.மார்க்ஸ் இது குறித்துக் கூறியிருப்பதாவது….

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா குறித்து இந்திய அளவில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் மதிப்புமிகு முன்னாள் துணைவேந்தர்கள் உட்படக் கல்வியாளர்கள் பலரும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகம் தமிழக அரசின் பல்கலைக் கழகம். இபோது மீச்சிறப்புப் பல்கலைக் கழகம் என அறிவிக்கப்பட்டவற்றுள் இரண்டே இரண்டு பல்கலைக் கழகங்கள்தான் மாநில அரசுகளின் பல்கலைக் கழகங்கள்.

ஒன்று மே.வங்க அரசின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம்; மற்றது நம் அண்ணா பல்கலைக் கழகம். ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் இது ஒத்துவராது என இந்த முடிவை மறுத்துள்ளது.

ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கக் கூடிய ஒரு முடிவுக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஒப்புதல் அளித்த நபர் இந்த சூரப்பா.

இதன் மூலம் இனி ஏழை எளிய தமிழ் மக்களின் பிள்ளைகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைய முடியாத நிலைதான் ஏற்படும். மத்திய அரசின் எடுபிடிபோலச் செயல்பட்டுக்கொண்டு மாநில அரசுப் பல்கலைக் கழகம் ஒன்றை இப்படி நிலை மாற்றம் செய்து எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகச் செய்யும் திமிர்த்தனமான முடிவைத் தன்னிச்சையாக எடுத்த நபர் இந்த சூரப்பா.

அது மட்டுமல்ல இதற்கான 300 கோடி ரூபாய்க்கு மேல் கோரப்படும் நிதியையும் இவரே திரட்டிவிடுவாராம். அதெப்படி ஒரு துணைவேந்தரால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட இயலும்?இதனைக் கல்வியாளர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இவை குறித்த ஒரு மயிரளவு விவரமும் தெரியாமல், ஏதோ கட்சிக்காரர்கள் கோரிக்கையை ஏற்று இந்த சூரப்பா மீது தமிழக அரசு விசாரணை மேற்கொண்டிருப்பதாக இந்த நடிகர் உறுமி இருப்பது அவரது வர்க்கம் சார்ந்த திமிரைத்தான் வெளிப்படுத்துகிறது.

இந்த நபரை வன்மையாகக் கண்டிப்போம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response