உபி கொடூரக் குற்றவாளிகளுக்கு பாஜக தலைவர் ஆதரவு – பழ.நெடுமாறன் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதை மறைப்பதற்காக குடும்பத்தின்ருக்குக் கூடத் தெரியாமல் நள்ளிரவில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.

இந்தியா முழுதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள உ.பி. நிகழ்ச்சி குறித்து பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….…

உத்தரப் பிரதேசத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததும், அப்பெண்ணின் உடலை பெற்றோரின் ஒப்புதல் இன்றி இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்ததும், நாடெங்கிலும் மட்டுமல்ல, உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த கொலை குறித்த குற்றப் பத்திரிகையில் உ.பி. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சர்வதேச சதித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை கூறியிருப்பது பிரச்சனையை முற்றிலுமாகத் திசைத்திருப்பும் முயற்சியாகும். மேலும், இது அநீதிக்கு மேல் அநீதி இழைப்பதாகும்.

இதில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆதிக்கச் சாதியினரை ஒன்று திரட்டும் முயற்சியில் பா.ச.க. தலைவர் ஒருவரே ஈடுபட்டிருப்பதையும் சாதி மோதலாக இதைச் சித்தரிக்க முயலுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாடெங்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதற்கு தவறுவதும் நடைமுறையாகிவிட்டது. இந்நிலைமை தொடருமானால், நாட்டின் பன்முகத் தன்மை அழிந்துவிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response