உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்துக்கு நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி மகளிர் அணி சார்பில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று மாலை பேரணி நடைபெற்றது.
அதற்காக சென்னை சின்னமலை, ராஜீவ்காந்தி சிலை அருகே தி.மு.க. மகளிர் அணியினர் திரண்டனர். ‘நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும்’ என்ற முழக்கத்துடன் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். பேரணி, கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றது.
பேரணி சிறிது தூரம் சென்றதும் காவல்துறையினர் இரும்புத் தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் காவல்துறையினருக்கும், பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரும்புத் தடுப்பு வேலியைத் தாண்டி கனிமொழி உள்ளிட்டோர் கவர்னர் மாளிகை நோக்கிப் புறப்பட்டனர்.
இதனால்,பேரணியில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட பெண்களைக் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தொற்று நோய்ப் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று 1500 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த காவல்துறை இன்று 191 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளது. கனிமொழி மீது கொரோனா பரப்பியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.