கோரிக்கை வைத்த ஓபிஎஸ் உடனே நிராகரித்த இபிஎஸ் – அதிமுக கூட்ட விவரம்

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிந்தது.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க மாலை 4.45 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் ‘அம்மாவின் (ஜெயலலிதா) அரசியல் வாரிசு… வாழ்க, நாளைய முதல்வர்… வாழ்க’ என்று வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து மாலை 4.53 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள், ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர்… வாழ்க, தமிழகத்தின் விடிவெள்ளி… வாழ்க’ என்று வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளும், அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக நடத்திய அவசர ஆலோசனைகளும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சலசலப்பு ஓய்ந்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

பின்னர் நடந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை வலுவாக நியமிப்பது முக்கியமாகும். என் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை வலுவாக்கி இருக்கிறேன். அதுபோல அனைத்து மாவட்டங்களிலும் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் களத்தில் அனைத்து நிர்வாகிகளும் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். கடினமாக உழைத்து, அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அரும்பாடு படவேண்டும்” என்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கட்சிப் பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு கூட முதலமைச்சரிடம், ‘கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வாரம் 2 முறை வந்து நிர்வாகிகள்-தொண்டர்களைச் சந்தித்துப் பேச உள்ளேன்’ என்று தெரிவித்தேன். உடனே முதலமைச்சரும், அப்படியா… அப்போ நானும் வருகிறேன்’ என்றார். அதன் எதிரொலியாகத்தான் இந்த அவசர ஆலோசனைக் கூட்டமும் கூட்டப்பட்டு இருக்கிறது. கட்சிப் பணி என்பது மிக முக்கியம். கட்சிக்காகப் பதவி விலகி கட்சிப்பணியாற்றத் தயார். என்னைப் போலவே 10 அமைச்சர்களும் பதவி விலகி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று சொன்னேன். ஆனால் யாரும் அதற்கு முன்வரவில்லை. நமது பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி கட்சிக்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தின் ஆலோசனையின்படியே கட்சியும், ஆட்சியும் நடக்கவேண்டும். கட்சியில் நாங்கள் மீண்டும் சேரும்போது இப்படித்தான் முடிவும் எடுக்கப்பட்டது. அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எனவே உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இப்போதைய நிலையில் அந்தக் குழுவை அமைக்க முடியாது. எந்த அடிப்படையில் நிர்வாகிகளை அக்குழுவுக்காகத் தேர்வு செய்வது? எனவே அந்தக் குழுவை நியமிப்பது தற்போது சாத்தியம் இல்லை” என்றார். மேலும், “அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் கூறியபடி இனி அவரும், நானும் கட்சி அலுவலகத்துக்கு வாரம் இருமுறை வருவோம். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்துப் பேசுவோம்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதால் ஓபிஎஸ் அணியினர் செய்வதறியாது திகைத்து நின்றதாகச் சொல்லப்படுகிறது.ஏனெனில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் தன்னுடைய அணிஅயைச் சேர்ந்த 6 பேரை நியமிக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதை உடனடியாக மறுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை வருகிற 28 ஆம் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வருகிற 28 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Response