பொன்ராதாகிருட்டிணனைக் கைவிட்டது பாஜக – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் அண்மையில் காலமானார்.

இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அத்தொகுதியில் பாஜக தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. அக்கட்சி சார்பில் பொன்ராதாகிருட்டிணன் போட்டியிட்டு வந்தார்.

இம்முறை இடைத்தேர்தல் வந்தால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றொரு தகவல் உலவுகிறது.

இதுகுறித்து சமுதாயச் செயற்பாட்டாளர் சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது….

குமரி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரை முடிவு செய்து விட்டார் பிரதமர் மோடி.அதற்கான அனைத்து கணக்கெடுப்புப் பணிகளும்,சர்வே முடிவும் அவரது கைக்குச் சென்று விட்டன.இதன் படி முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியான மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் களமிறக்கப் பட உள்ளார்.

இவர் குஜராத்தில் மோடியின் ஆட்சியின் போது அங்கு தலைமைச் செயலகம்,மற்றும் மாவட்ட வாரியாக சிறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியாய் பணிபுரிந்தவராம்.அத்துடன் மாநில தலைமைச் செயலாளராய் இருந்த காலத்தில் மோடியின் நன்மதிப்பைப் பெற்றவராம்.

கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பாண்டியன்-ஐ வேட்பாளர் ஆக்கி எம்.பி.ஆக்குவதுடன் இராசாங்க மந்திரி பதவியையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.ஜெகதீஷ் பாண்டியனின் உற்ற நண்பர்தான் தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் வெளியுறவுத் துறை மந்திரியான ஜெய்சங்கர்.இவரும் குஜராத்தில் மோடியின் கால கட்டத்தில் ஐ.எப்.எஸ்.இலாகாவில் பணிபுரிந்தவர்தான்.அத்துடன் ஜெய்சங்கரின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடியாகும்.ஜெகதீஷ் பாண்டியனின் இன்னொரு நட்பாளர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

குமரியில் மோடியின் வேட்பாளராய் களமிறக்கப்படும் ஜெகதீஷ் பாண்டியன் சி.எஸ்.ஐ.கிறித்தவ நாடார் ஆவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் பொன்ராதாகிருட்டிணனை பாஜக தலைமை கைகழுவிவிட்டது என்பது உறுதியாகிவிட்டதென்கிறார்கள். இதனால் பொன்ராதாகிருட்டிணன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response