உடலை உறுதி செய்ய விளையாட்டு மனதை உறுதி செய்ய இசை – சக்திஸ்ரீகோபாலன் கருத்து

தொடக்கப்பள்ளிகளில் இசையை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐநாவில் நடைபெற உள்ள கல்விக் கருத்தரங்கத்தில் பங்கேற்பதற்காக, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு செல்வகுமார் ஒருங்கிணைப்பில், நடைபெற்ற 5 ஆவது இணையவழிக் கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்துச் சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வு பல ஆலோசனைக் கூட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதன் ஐந்தாவது இணையவழி ஆலோசனைக் கூட்டம் 29.8.2020 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்.

இக்கலந்துரையாடலில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியை டாக்டர்.பிரமீளா குருமூர்த்தி தலைமை தாங்கினார். இசையமைப்பாளரும் பாடகருமான ஸ்ரீராம் பரசுராம், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ஹிப்பாப் ஆதி,பாடலாசிரியர் கவிஞர் சிநேகன், பாடகி சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சுருதி பாலமுரளி, கல்லூரிகளில் மட்டுமே இசைப்பயிற்சி இருக்கிறது. இதைத் தொடக்கக் கல்வியிலிருந்து இசைப் பயிற்சியை ஒரு பாடமாக வைக்க வேண்டும், ஏனென்றால் இன்றைக்கு இருக்கிற சூழலில் மன அழுத்தம் குறைவதற்கு, குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டுக்கு, ஞாபகசக்தி வளர்ச்சிக்கு, கல்வித் திறன் மேம்பாட்டுக்கு இசை ஒரு தூண்டுகோலாக, இசை ஒரு ஊக்கியாக, இருக்கும் என்பது திண்ணம் என்று பேசினார்.

திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் பேசுகின்ற போது, மனித வாழ்க்கை தாலாட்டு என்ற இசையில் தொடங்கி, ஒப்பாரி என்ற இசையில் முடிகிறது. மனித வாழ்க்கை இடைப்பட்ட காலங்களிலும், இளம்பருவம் , காதல் வாழ்க்கை, சந்தோஷம், துக்கம் , பிரிவு , முதுமை , இனிமை, இவற்றைப் பறைசாற்றுவது இசை அல்லது ஆற்றுப்படுத்துவதில் ஒன்றாக இசை திகழ்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களை நடத்த துவங்குகிற போது ராகங்களின் மூலமாகத்தான் மொழிப் பாடமாக இருந்தாலும், கணிதப் பாடமாக இருந்தாலும், நடத்துவதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் இசைக்கு என்று தனி ஒரு வகுப்பு நடத்துவது இல்லை, இசையில் 1300 பாடல் வகைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நாத்து நடும் பொழுது, களை எடுக்கின்ற பொழுது, குழந்தையைத் தூங்க வைக்க, சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, காதலை வெளிப்படுத்த , பிரிவை வெளிப்படுத்த, துக்கத்தை வெளிப்படுத்த , என பல்வேறு வகையான பாடல்கள் உலகம் முழுவதும் அந்தந்த மொழிகளில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் தொகுக்க வேண்டியது. இந்த மண்ணின், மனிதர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய நோக்கமாகக் கருதி செய்ய வேண்டும் .

எனவே ஒவ்வொரு நாளும் இசைக்கு என்று ஒரு வகுப்பை, இசைபாடும் ஆரம்பப் பள்ளியிலிருந்து, கல்லூரி வரை வழங்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போல மாணவர்களின் நல்வழிப்படுத்த, இன்றைக்கு இருக்கிற நெருக்கடியில் மன இறுக்கத்தைக் குறைக்க, தனிமனிதனை ஒழுங்குபடுத்த, இசை ஒரு முக்கியக் கூறாக விளங்குகிறது.

திரைப் படத்தைப் பொறுத்தவரையில் திரைப்படப் பாடல்களில் மரபுக்கவிதைகள் குறைந்து கொண்டே வருகின்றன. மரபுக் கவிதைகள் தான் இசையோடு இணைந்த ஒரு ஓசை நயம் உடைய கவிதைகளாக இருக்கும். அது ஒவ்வொன்றும் ஒரு வகை இசையை வெளிப்படுத்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட மரபுக் கவிதைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு வகை இசையைக் கற்றுக் கொள்வது அவசியம், மனித சிந்தனை விரிவடைய இசையைக் கற்றுக் கொள்வது அவசியம், மன இறுக்கத்தில் இருந்து விடுபட இசையைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று பேசினார்.

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பேசுகிற பொழுது, இந்த கல்வியில் புதுமை என்கிற கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிற ஒரு கருத்தரங்கமாக நான் கருதுகிறேன்.

பல்வேறு இசைக் கலைஞர்கள் அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிற முதல் கல்விக் கருத்தரங்கம் இதுவாகத் தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

இசை என்பது மனித குலத்தின் அன்பு , இரக்கம், பாசம் , இதை வெளிப்படுத்துகிற ஒரு தன்மை எனவே பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே இசை வளர்க்க வேண்டியது அவசியம்.

ஏனென்றால் உடலை உறுதி செய்வதற்கு விளையாட்டு ஒரு பாடமாக ஒரு வகுப்பு ஒவ்வொரு நாளும் வழங்குவது போல, மனதை உறுதி செய்வதற்கு இசையை ஒரு பாடமாக ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பாவது வழங்க வேண்டியது அவசியம் என்று பேசினார்.

ஹிப்பாப் தமிழா ஆதி பேசுகின்றபோது, அனைவரும் இசையைப் பயிற்றுவிக்கும் முறை பற்றி இங்கே பேசினர், இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்த இசையை எவ்வாறு சந்தைப்படுத்துதல் என்பதைப் பள்ளி கல்லூரிகளில் இருந்தே நாம் ஒரு பாடமாக வைக்க வேண்டும். ஏனென்றால் எத்தனையோ இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், பல்வேறு திறன்களைத் தன்னுடைய படிக்கும் காலத்தில் வளர்த்து வருகிறார்கள்.

ஆனால் அதிலிருந்து அவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அந்தத் திறனை கைவிட்டு விடுகிறார்கள். எனவே அவர்கள் இசைக்கருவியைப் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் அல்லது பாடல்கள் எழுதுவது அல்லது பாடல்கள் பாடுவது என்று பல்வேறு இசைத் துறை சார்ந்து பிரிவுகளில் திறன்களை வளர்த்துக் கொண்டாலும், அதைத் தொடர்ந்து அவர்கள், அதை எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் அதன் மூலமாக எவ்வாறு வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான பொருளீட்ட வேண்டும் என்பதை உணர்ந்து அதைக் கற்பிக்கிற பட்சத்தில் அனைவருமே இசையை ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள், அப்படி கற்றுக் கொண்டால் மன அழுத்தம் மன இறுக்கம் மனித குலத்தில் ஒரு அன்பும் எப்பொழுதும் நிலவும் என்பது உறுதி என்று பேசினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகின்ற போது, இந்திய நாடு முழுவதும் கிராமப்புறங்களில் நாட்டுப்புற பாடல்கள் நாட்டுப்புற இசைகள் நிறைந்து இருக்கிறது. அவை அனைத்தையும் உலக மக்களுக்கு எடுத்துச் செல்கிற வேலையை நாம் செய்ய வேண்டும் அந்த கிராமப்புற இசைகளை, நாட்டுப்புறக் கலைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இசை அமைப்பாளர் ஸ்ரீராம் பரசுராமன் பேசுகின்ற போது, கர்நாடக இசையைப் பொருத்தவரை மிகக் குறைந்த சதவீத மாணவர்களே கற்றுக்கொள்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

நமது சட்டத்தில் கல்வி சமமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இருக்கிறதோ அதே போல அனைத்து வகையான இசைகளும் அனைவருக்கும் சமமாகச் சென்றடையவேண்டும். இன்றைக்கு தனியார் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது போல அரசுப் பள்ளியில் கிடைக்கிற மாணவர்களுக்கு இசையைப் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் 90 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அரசுப் பள்ளிகளிலேயே இசையை ஒரு பாடமாக சேர்த்து வைக்க வேண்டும் என்று பேசினார்.

நிறைவாக டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியை டாக்டர்.பிரமீளா குருமூர்த்தி பேசுகின்ற பொழுது,

வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இசை சென்றடைய வேண்டும்.அனைவரும் சொன்னது போன்று அரசுப்பள்ளிகளில் இசை என்பது அனைவருக்கும் சென்றடையவில்லை நமது பல்கலைக்கழகங்கள் இசை எம்.பில் பட்டத்தைப் பெறுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது இல்லை.

அதேசமயத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் எம்பில் என்கிற நிறைஞர் பட்டம் பெறுவதற்கு ஆர்வம் கொள்கிறார்கள், காரணம் அவர்கள் படித்து முடித்தவுடன் உடனடியாக அந்த மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு அரசுப் பள்ளிகளில் கூட இசை பாடமாக இருப்பது என்பது தான் முக்கிய காரணம்.

எனவே இன்றைக்கு இந்த கோவிட் சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இசைப்பயிற்சி வழங்குவதில் நாம் முயற்சி எடுக்க வேண்டும். குறிப்பாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த முயற்சியை எடுத்தால் என்னைப் போன்று அல்லது இங்கு வந்து இருக்கின்ற இசைத் துறை அறிஞர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆன்லைன் இசைப் பயிற்சியின் மூலமாக மாணவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் எந்த வயதினரும் படிக்கும் அளவிற்கு இந்தப் பயிற்சியை நாம் நடத்த வேண்டும்.

அப்படி இசைப் பயிற்சி அளித்தால் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த மனித குலத்திற்கு நாம் செய்கிற பெரும் பேராக இருக்கும்.

அரசுப்பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இசையை தினமும் ஒரு பாட வகுப்பு நடத்த வேண்டும், என்று சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் கனடா பாடகி ஸ்ருதி பாலமுரளி, ஐரோப்பியாவில் ரெயின்போ இசைக் குழுமத்தின் இயக்குநர் ஸ்ரீபதி, சென்னை ராணி மேரி கல்லூரியின் இசைத்துறை துணைப் பேராசிரியை டாக்டர் கற்பகம், அமெரிக்கப் பாடகி பிரபாளினி ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை வழங்கினார்கள்.

இறுதியாக ஊடக பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் நன்றியுரை கூறினார்.

Leave a Response