கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு விருது – உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பு வழங்கியது

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்திய நான்காவது மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்டு 2020 என்ற கொரோனா முதன்மை களப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று 17-10-2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை ஊடகத் துறையைச் சார்ந்த ரஞ்சித் தொகுத்து வழங்கினார் உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சமூக மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மை இயக்குநர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமை தாங்கி விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்,

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சி எம் கே ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் நான்காவது மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்டு 2020 க்கான விழா மலரை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் இராதாகிருஷ்ணன் வெளியிட சென்னையில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் சிஎம் கே ரெட்டி பேசுகிற பொழுது,

‘கொரானா முன்களப்பணியாளர்களைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சியைச் சிறப்புற ஒருங்கிணைத்திருக்கிற உலகத் தமிழ் வம்சாவளி அமைப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே கொரானா தடுப்பு களப்போரில் பங்கேற்ற மருத்துவர்கள் செவிலியர்கள் காவல்துறையினர் பத்திரிக்கை துறையினர் தன்னார்வப் பணியாளர்கள் என ஒரு சிலரை மட்டுமே இங்கே அழைத்து இருக்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தக் களத்தில் தம் உயிரைப் பணயம் வைத்து அளப்பரிய களப்பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய அளப்பரிய பணியைப் பாராட்டும் விதமாக முதல் கட்டமாக நடக்கும் இந்தப் பாராட்டு விழாவில் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் .

ஏனென்றால் மருத்துவர்களும் ஆசிரியர்களும் இந்த நாட்டுக்கு மிக முக்கியமானவர்கள், மருத்துவர்கள் உயிரைக்காக்கும் களத்தில் இருக்கிறார்கள், ஆசிரியர்கள் நல்ல பண்பு மிக்க இந்தச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஏன் டாக்டர்களை உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழக அரசை இந்த நேரத்தில் பாராட்டியாக வேண்டும், என்றால் தமிழக அரசுதான் மிக வேகமாக மக்களிடத்திலே ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக விழிப்புணர்ச்சி சென்றடைவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவத்துறையில் அனைவருக்கும் முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு உறுப்பு தானம் செய்தலும் இந்த நாட்டிலேயே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. இப்படி பல்வேறு வகையில் மக்கள் நலனில் இந்த அரசும் சுகாதாரத் துறையும் ஆற்றி வருகிறது நாம் பாராட்டியாக வேண்டும்” என்று பேசினார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு பேசுகிற பொழுது,

“ஆரம்பத்தில் ஒரே ஒரு மருத்துவமனையில் வெறும் 10 படுக்கை வசதி அறை கொண்ட கொரானா தடுப்பு மையம் உருவாக்கப்பட்டு இன்றைக்கு ஒரு இலட்சத்து 4 ஆயிரம் படுக்கை வசதி கொண்ட,ஆக்சிசன் வசதி கொண்ட,சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.இது மிகக் குறைந்த காலத்தில் வேகமாகத் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் லேப் வசதி குறைவாக இருந்தாலும் இன்றைக்கு 192 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரையில எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டாலும் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏறக்குறைய 94 விழுக்காடு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்பது நமது தமிழக அரசு எடுத்த முயற்சிகளும் சமூக நல குடும்ப நல அமைச்சகம் அமைச்சர் மற்றும் முதன்மை இயக்குநர் எடுத்த முயற்சிகளும், அந்த ஆலோசனைகளை ஏற்று தன் உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் என அனைவருடைய பங்களிப்பும் மிகப்பெரியது. அவர்களை அழைத்து இந்தப் பாராட்டு விழா நடத்தி வருகிற உலகத் தமிழ் வர்த்தக அமைப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என்றார்.

கொரோனா தடுப்பு முதன்மை களப் பணியாளர்களுக்கு மருத்துவர் செவிலியர் சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய அனைவருக்கும் மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்டு வழங்கி சிறப்புரையாற்றிய இராதாகிருஷ்ணன் பேசுகிற பொழுது,,,,,,

“மருத்துவ துறை சார்ந்த மூத்த மருத்துவர்கள் மூத்த பேராசிரியர்கள் துறைத் தலைவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறையினர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காவல்துறையினர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இணைந்து இந்த கொரானா ஒழிப்பு முதன்மை களப்பணியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கும் விழாவை ஒருங்கிணைத்து இருக்கும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் அதன் தலைவர் செல்வகுமார் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.

ஏனென்றால் அனைத்து களப் பணியாளர்களின் நேரடி களப் பணிகளை நான் கண்டிருக்கிறேன் அவர்கள் பணி மிக அளப்பரியது. எனவே இந்த நெருக்கடியான சூழலிலும் இந்த விழாவில் கலந்து கொண்டதற்கான காரணம் இதன்மூலம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழகத்திலே எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கைப் பணியினை கொரானா தடுப்பு களப் பணியாற்றி வருகிறோம் என்பதைத் தெரிவிக்கும் காரணமாகவும், இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் இன்னும் விழிப்போடு இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவும் தான் மூத்த மருத்துவர்கள் உள்ளிட்ட நாமெல்லாம் கலந்து கொண்டு இருக்கிறோம்.

இன்னும் எத்தனையோ முகம் காட்டாத களப்பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலும் உடனடியாக புள்ளிவிபரங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் இந்த கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை, ஒத்துழைப்புகளை, வழங்கி வருகிறார்கள்.

நானும் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று நேரடி களப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.

நம்மால் இந்த தடுப்புப் பிரிவு மருத்துவமனைகளில் ஒரு மணிநேரம் கூட இருக்க முடிவதில்லை. ஆனால் பல மாதங்களாக அங்கேயே தங்கி ஏறக்குறைய ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பணி மிக அளப்பரியது. இதில் சில மருத்துவர்கள் செவிலியர்கள் தன் உயிரையே இழந்து இருக்கிறார்கள்.

இனி ஒருபோதும் அப்படி நடக்கக் கூடாது. சில பேர் கேட்கிறார்கள் மருத்துவத்துறையும் மருத்துவர்களும் கொரானா விடம் தோற்று விட்டார்களா? என்று அப்படி இல்லை “மருத்துவர்கள் தோற்றுவிட்டால் மனிதகுலமே தோற்றதாக அர்த்தம்” ஒருபோதும் தோற்காது ஏனென்றால் இதற்கு முன்னர் பல கொடுமையான நோய்களைக் கண்டிருக்கிறோம். நமது முன்னோர்கள் பல நோய்களைக் கடந்து வந்திருக்கிறார்கள்.

இதுவும் அப்படித்தான் இதை முறையாக எதிர்கொள்ள வேண்டியது நம் கடமை.மருத்துவர்களுக்கு நோயைக் கொடுப்பது நாம்தான் என்கிற உணர்வை பொதுமக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். எவ்வளவுதான் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினாலும் இன்னும் முகக் கவசம் அணியாமல் கூட்டமாக மக்களைப் பார்க்க முடிகிறது. அதைத் தவிர்க்க வேண்டும்.

இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறார்கள் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது தான் தீர்வு, அனைவரும் வெளியே சென்று வந்தவுடன் கைகழுவுதல் ஆவி பிடித்தல் முகக் கவசம் அணிதல் ஆகியனவற்றைச் செய்தால் 90% ஆக இந்த நோய் பரவாது.

முகக் கவசத்தையும் சரியான முறையில் அணிவது இல்லை அப்படிச் சரியாக அணியவில்லை என்றாலும் நோய் பரவும். டி.நகரில் சென்று பார்த்தால் மனிதத் தலைகள் மட்டுமே தெரியும் அளவிற்குக் கூட்டம் இருக்கிறது.அவர்களுக்கு ஒருவருக்கு இருந்தாலும் அனைவருக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.

இப்படி இருக்கையில் புள்ளிக் கணக்குகள் கூடுகிறது என்று குறைகிறது என்று கணக்கிட்டுக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை, அதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. எனவே மக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், நாம் இன்னும் கூடுதல் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும்.

இப்படி மக்கள் கூடுகிற எல்லா இடங்களிலும் கை கழுவுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பாதுகாப்போடு மனித இடைவெளி போன்றவற்றைப் பாதுகாப்போடு நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.என்று கேட்டுக் கொண்டு, இந்த நேரத்தில் உலகம் முழுவதும் 40 நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி காட்டிக்கொண்டு மருத்துவர்களின் அளப்பரிய பணியைப் பாராட்டி அவர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி இருக்கிற உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அவர்களுக்கும், உலக தமிழ் வர்த்தக சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர், இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் மூத்த மருத்துவர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், திரைத் துறையைச் சார்ந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், நடிகர் ஸ்ரீமன், நடிகர் இயக்குனர் மனோபாலா, நடிகர் வையாபுரி, நடிகர் வடிவுக்கரசி, நடிகர் சிங்கமுத்து, நடிகர் ரவிமரியா, நடிகர் பாண்டி, நடிகர் ஜெயபால், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் இவர்களை வைத்து விழிப்புணர்ச்சி படம் இயக்கிய இயக்குநர் கணேஷ் பாபு போன்றோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர்.

இறுதியாக மருத்துவர் சத்தியநாராயணன் நன்றியுரை வழங்கினார்.

Leave a Response