கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.
முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்குப் படையெடுத்தனர். கொரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் (நேற்று முன்தினமும், நேற்றும்) சுமார் 2½ இலட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதவிர சுயநிதிப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து, வருகிற 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது.