இராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் இந்தியாவில் கலவரம் நடத்த சதி – ராகுல் கருத்தால் வெளிப்படும் உண்மை

இந்தியாவில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை ராகுல்காந்தி முன் வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அவர்கள் போலியான செய்தியைப் பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வைத் தூண்டுகிறார்கள். தேர்தலில் அதனைப் பயன்படுத்தி செல்வாக்கைப் பெற முயல்கின்றனர். இறுதியாக அமெரிக்க ஊடகம், முகநூலின் உண்மை பற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளைத் திரித்துக் கூறும் வேலைகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்ற காங்கிரசுக் கட்சியின் குற்றச்சாட்டுக்குச் சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியைக் கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில், வெறுப்புப் பேச்சுகளுக்கான முகநூலின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஆளும் பா.ஜ.க.வின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் முகநூல் பாரபட்சம் காட்டுகிறது.

முகநூல் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர், சர்ச்சைக்குரிய அரசியல்வாதிக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பா.ஜ.க. தொண்டர்களின் அத்துமீறல்களைத் தண்டிப்பது, இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் வர்த்தக நலனில் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறியுள்ளார் என்று அமெரிக்க ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

முகநூலில் பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் தொடர்பாக விதிமுறையை முகநூல் நிறுவனம் வகுத்தது. அதன் படி முகநூலில் வெளியிடப்படும் வெறுப்புக் கருத்துகளைத் தடை செய்யவேண்டும். ஆனால், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அன்கி தாஸ் எனும் பெண்மணி, “‘இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்ப உதவுவதாக” அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் தெரிவித்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகை கூறியுள்ளது.

ராகுல் சொன்ன அமெரிக்க ஊடகம் குறிப்பிட்டுள்ள அதிகாரி, தமிழினப் படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான அன்கி தாஸ் என்றும் இவர்தான், சர்வதேச நிறுவனமான முகநூலின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு இயக்குநராக இருந்துகொண்டு இந்தியாவில் கலவரம் நடத்தத் திட்டமிடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response