போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு

திருச்சி வழியாக மதுரைக்கு ஒரு மகிழுந்தில் போதைப் பொருளான ஒபியம் பவுடர் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் காமராஜ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு மன்னார்புரம் ரவுண்டானா அருகில் மகிழுந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு மகிழுந்தில் 2 பாட்டில்களில் ஒபியம் பவுடர் இருந்ததைக் கண்டு பிடித்து அதனைப் பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் இருந்து இதனைக் கடத்தி கொண்டு வந்ததாக பெரம்பலூர் ரோவர்ஸ் சாலையைச் சேர்ந்த ருவாண்டோ அடைக்கலராஜ் (வயது 42), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்கிற அத்தடியான் (44), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (40) வெண்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஆறுமுகம் (65) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் எடை ஒரு கிலோ 800 கிராம். இதன் மதிப்பு சுமார் ரூ.4½ இலட்சமாகும். இதனை மதுரைக்குக் கடத்திக் கொண்டு செல்ல முயன்றபோது திருச்சியில் பிடிபட்டு உள்ளது. மதுரையில் இதனை யாருக்காகக் கொண்டு சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 மகிழுந்துகளையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

இவற்றில் ஒரு மகிழுந்து பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானதாகும். அந்த மருத்துவர் நேற்று முன்தினம் காப்பீடு திட்டம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி திருவெறும்பூருக்கு வந்து உள்ளார். ருவாண்டோ அடைக்கலராஜ் மருத்துவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் அவரை நம்பி மகிழுந்தைக் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த மகிழுந்து போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதால் தற்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று மாலை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படுத்தப்பட்டனர். அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இவ்வழக்கில் கைதான ருவாண்டோ அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கிறார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response