அதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டத் தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியின்போது,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதலமைச்சரைத் தேர்வு செய்வோம். அ.தி.மு.க. கொள்கையின்படி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி யாரை முதலமைச்சராக அறிவிக்கிறார்களோ, சொல்கிறார்களோ, அவர்தான் முதலமைச்சர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது’ என்று சொன்னார்.
அவருடைய இந்தக் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘ எடப்பாடியார் (எடப்பாடி பழனிசாமி) என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021 ஆம் நமதே…’ என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியதாவது….

முடிவு எடுத்துவிட்டு இலக்கை நோக்கிப் பயணித்தால் தான் வெற்றி இலகுவாகக் கிடைக்கும். பயணம் செய்துவிட்டு முடிவைப் பின்னால் எடுப்போம் என்று சொன்னால், அது பிரச்சினைக்கும், குதிரை பேரத்துக்கும் தான் வழிவகுக்கும்.இந்தநிலை மாற வேண்டும் என்று சொன்னால், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெளிப்படைத் தன்மையாகப் பேசி நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். ஏழை-எளிய மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எனவே யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்களின் இந்தக் கருத்துகளிலிருந்து அதிமுகவில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகிவிட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response