நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக வேலை இழந்தேன் – நியூஸ் 18 செய்தியாளர் ஒப்புதல்

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் ஜூலை 17 இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அந்த யூடியூப் சேனலில் உள்ள அனைத்து காணொலிகளும் நீக்கப்பட்டு அது முடக்கப்பட்டது. அதோடு அதன் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொருபக்கம், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் குணசேகரன், ஆசிப்முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும்விதமாக,நியூஸ் 18 இல் பணியாற்றிய பத்திரிகையாளர் ஆசிப் முகமது ஜூலை 22 அன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,கருப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வேண்டுமென்றே என்னை தொடர்புபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். சகிப்புத்தன்மையின் அடையாளமான தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கத்தினன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமையே.

நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து விலகியுள்ளேன். நடந்தவற்றை விரைவில் விரிவாக எழுதுகிறேன். ஆதரவளித்துவரும் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் ஊடக நிறுவனங்களுக்கு இந்துத்துவ அமைப்புகள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பது வெளிப்படையாகியுள்ளது.

Leave a Response