ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் களம் இறங்குவதால் இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
அதற்குள் கொரோனா வைரசின் காரணமாக ஊரடங்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதுவான காலஇடைவெளியில் நடத்திட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்பு காட்டியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதன் மூலம் 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் உள்ள சிக்கல் நீங்கியது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த முறை ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.
அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி தேதி இன்னும் இறுதி செய்யப்படாவிட்டாலும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.
இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று அளித்த பேட்டியில், ‘13 ஆவது ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறோம். அரசின் ஒப்புதல் கிடைத்ததும் தேதி இறுதி செய்யப்படும்.
ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழு அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது போட்டி அட்டவணை முடிவு செய்யப்படும். இப்போதைக்கு முழுமையாக 60 ஆட்டங்களை நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெரியாது. எனவே ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து அதற்கு தக்கபடி முடிவு மேற்கொள்வோம். உகந்த சூழ்நிலை இல்லாவிட்டால் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும். அடுத்த ஓரிரு வாரங்களில் எல்லாமே இறுதி செய்யப்பட்டு விடும்.
வீரர்களின் பாதுகாப்பே முதலில் முக்கியம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், சர்வதேச கால்பந்து சம்மேளனமும் வழங்கியுள்ள வழிகாட்டுதலை கவனத்தில் கொண்டு, வீரர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் விரைவில் வகுக்கப்படும்’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெளிநாட்டுக்கு மாற்றப்படுவது புதிதல்ல. 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடந்ததால் அந்தச் சமயத்தில் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய அரசு கூறியது. இதனால் 2 ஆவது ஐ.பி.எல். போட்டி தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கு முழுமையாக நடத்தப்பட்டது.
இதே காரணத்துக்காக 2014 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடக்கக் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.