தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாத்திடுங்கள் – அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை

பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.

சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது.

இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response