தமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்

வேளாண் விளை பொருட்களுக்கு இந்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை வேளாண்மையை நசுக்கிவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்று வேளாண்மைக்கான அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, 01.06.2020 அன்று மூத்த நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருப்பது வேளாண்மையை நசுக்கிவிடும்!

எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான “தேசிய உழவர் ஆணையம்” பரிந்துரைப்படி, பல்வேறு வேளாண் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 விழுக்காடு இலாபம் வைத்து இந்த ஆதரவு விலை கணக்கிடப்பட்டதாக அமைச்சர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானதும், மோசடியான கணக்கும் ஆகும்!

எடுத்துக்காட்டாக, நெல்லுக்கு ஒரு குவண்டாலுக்கு சென்ற ஆண்டை விட ரூபாய் 53 சேர்த்து 1,868 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் கணக்கீட்டின்படியானது அல்ல!

கடந்த 2004ஆம் ஆண்டு, எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம் அறிவித்த ஆதார விலையானது இலாப விலை அல்ல! ஆயினும், அதையாவது முதல்கட்டமாக வழங்க வேண்டுமென உழவர் அமைப்புகள் கோரி வருகின்றன.

“A2 + FL + மறைமுக உற்பத்திச் செலவு = C2” என்ற வாய்ப்பாட்டின்படி, உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு அதன் மேல் 50 விழுக்காடு குறைந்தபட்ச இலாபம் வைத்து, ஆதரவு விலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். இதில் A2 என்பது, சாகுபடிக்கான விதை, உரம், தண்ணீர், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களின் விலையும், உழவுத் தொழிலாளர்களின் ஊதியமும் சேர்த்த அடிப்படைச் சாகுபடி செலவாகும். FL என்பது, உழவர்களின் குடும்ப உழைப்பின் கூலி மதிப்பாகும். மறைமுக உற்பத்திச் செலவு என்பது நிலத்தின் வளத் தேய்மானம், சாகுபடி முதலீட்டுக்கான வட்டி ஆகிய மறைமுகச் சாகுபடி செலவுகளைக் குறிக்கும். இவை அனைத்தின் கூட்டுத் தொகைதான் மொத்த உற்பத்திச் செலவு – C2 ஆகும்.

இவ்வாறு, சாகுபடிச் செலவை வெவ்வேறு மண் வளமும், மழை வளமும், பருவநிலைகளும், தொழிலாளர்களுக்கான ஊதியங்களும் முற்றிலும் வேறுபடும் இந்தியா முழுவதற்கும் ஒன்றாகக் கணக்கிட்டுக் கொள்வதே அறிவியலுக்குப் பொருந்தாதது. இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே விதமான சாகுபடிச் செலவைக் கணக்கிட முடியாது.

ஏழு வகையான வெவ்வேறு தன்மைகளோடு வேளாண் மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒரு கணக்கிற்கு இவற்றிற்கிடையே சராசரி சாகுபடிச் செலவைக் கணக்கிட்டு விட முடியும்.

இந்தப் பின்னணியில், பாசன வசதியுள்ள தமிழ்நாட்டு கிராமம் ஒன்றின் நெல் உற்பத்திக்கான அடிப்படைச் செலவு (A2 + FL மட்டுமே) ஏக்கருக்கு 33,480 ரூபாய் ஆகும். இயற்கை பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால், ஒரு ஏக்கருக்குக் கிடைக்கும் நெல் விளைச்சல் 18 குவிண்டால் ஆக இருக்கும். அதாவது, ஒரு குவிண்டால் நெல் சாகுபடிக்கு ஆகும் குறைந்தபட்ச செலவு 1,860 ரூபாய் ஆகும்.

நெல் சாகுபடியைப் பொருத்த அளவில், மேற்குறித்த மறைமுகச் சாகுபடி செலவு சராசரியாக 43 விழுக்காடு என எம்.எஸ். சுவாமிநாதன் குழு கூறுகிறது. அதனை சேர்த்தால், C2 என்ற மொத்த உற்பத்திச் செலவு 1 குவிண்டாலுக்கு 2,660 ரூபாய் ஆகும்.

இந்த சாகுபடிச் செலவோடு 50 விழுக்காடு குறைந்தபட்ச இலாபம் சேர்த்தால், குறைந்தபட்ச ஆதரவு விலை நெல்லுக்குக் குவிண்டாலுக்கு 3,990 ரூபாய் வழங்க வேண்டும். வெறும் A2 + FL என்ற நேரடி உற்பத்திச் செலவை மட்டும் கணக்கில் கொண்டால் கூட, குறைந்தபட்ச ஆதரவு விலை நெல்லுக்குக் குவிண்டாலுக்கு 2,790 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இந்திய அரசு அறிவித்திருப்பதோ 1,868 ரூபாய்தான்! சாகுபடிச் செலவைக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்!

நெல் வேளாண்மை குறைந்தபட்ச இலாபம் தரும் தொழிலாகக் கூட இருக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது.

அறிவித்திருக்கிற கொள்முதல் விலையை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டிருக்கிற செய்திக் குறிப்பிலேயே, நெல் சாகுபடியிலிருந்து வேறு பயிர் சாகுபடிகளுக்கு உழவர்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அடிப்படை விலை முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. மற்ற பயிர்களுக்கான விலையாவது, ஊக்கமளிப்பதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!

மீண்டும் மீண்டும் இழப்பை சந்தித்து வரும் நெல் உழவர்கள் தங்கள் பட்டறிவின் காரணமாக, காவிரிப் பாசன மாவட்டங்களிலேயே கூட நெல்லை விட்டுவிட்டு பருத்திக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களில் 2019இல் 41,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி நடந்தது. 2020இல் இம்மாவட்டங்களில் பருத்தி சாகுபடி பரப்பு 72,000 ஏக்கராக உயர்ந்திருக்கிறது.

பருத்தி சாகுபடி மிகவும் நுண்மையானது. பருத்தி பறிக்கிற முதல் நாள் சிறு தூறல் விழுந்தால் கூட, விற்க முடியாத பொருளாக மாறிவிடும்.

இந்த நெருக்கடிக்கிடையே, பருத்தி சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 39,760 ரூபாய் ஆகிறது. இது A2 + FL என்ற அடிப்படை சாகுபடிச் செலவு. ஒரு ஏக்கரில் நடுத்தர இழைப் பருத்தி சராசரியாக 10 குவிண்டால் விளையும். அதாவது, ஒரு குவிண்டாலுக்கான சாகுபடிச் செலவு 3,976 ரூபாய் ஆகும். இத்துடன் 50 விழுக்காடு குறைந்தபட்ச இலாப விலை சேர்த்தால் 5,964 ரூபாய் – அடிப்படை ஆதார விலையாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு நேற்று (01.06.2020) அறிவித்திருப்பதோ 5,515 ரூபாய் ஆகும்!

வழக்கம்போல், இப்போதைய அறிவிப்பிலும் கரும்புக்கான விலை அறிவிக்கப்படவில்லை. அது சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் விலை 2,350 ரூபாய் + தமிழ்நாடு அரசு அறிவித்த போனஸ் விலை 500 ரூபாய் என்பதோடு நிற்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் இந்திய அரசு அறிவித்த டன்னுக்கு 2,350 ரூபாய்தான் வழங்குகின்றன. அதிலும், பல கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. ஆனால், ஒரு ஏக்கருக்கு கரும்புச் சாகுபடிச் செலவு சராசரியாக 1,34,950 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டில் ஒரு ஏக்கரில் 48 லிருந்து 55 டன் கரும்பு விளைகிறது. ஏக்கருக்கு 55 டன் என்ற உயர் அளவை வைத்துக் கொண்டாலும், ஒரு டன்னுக்குக் கரும்பு உற்பத்திச் செலவு 2,453 ரூபாய் ஆகும். இந்திய அரசு அறிவித்திருப்பதோ 2,350 ரூபாய்தான்.

இவ்வாறு நிலக்கடலை, எள், சோளம் போன்ற எந்தப் பயிருக்கும் இந்திய அரசு அறிவித்திருக்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை – சாகுபடிச் செலவுக்கே ஈடுகட்டி வராத மோசமான விலையாகும். “வேளாண்மைக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக” ஏதோ மாபெரும் இலாப விலை அறிவிப்பதுபோல இந்திய அரசு இதைக் கூறிக் கொள்வது உழவர்களின் வேதனையில் விளையாடுவதாகும்!

வேளாண் விளை பொருட்களின் விலையை மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளுமாறு அதிகாரம் வழங்குவதுதான் அறிவியல்படியானது; சனநாயக வழிப்பட்டது!

குறைந்தது, இந்திய அரசு அறிவிக்கும் ஆதார விலையாவது 2014லேயே நரேந்திர மோடி அரசு ஏற்றுக் கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படியான குறைந்தபட்ச ஆதரவு விலையாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது மட்டுமின்றி, எம்.எஸ். சுவாமிநாதன் குழு கணக்கீட்டின்படி விலை வழங்கிவிட்டதாகச் சொல்லிக் கொள்வது கொடுமையானது!

பொருளியல் முடக்கத்திலும் கொரோனா நெருக்கடியிலும் சிக்கியுள்ள இந்தியப் பொருளியல் சந்தையை புத்துயிர் ஊட்டவும் இது உதவாது!

எனவே, இந்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிவித்தவாறு C2 கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு மேல் 50 விழுக்காடு குறைந்தபட்ச இலாபம் சேர்த்து நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம், கரும்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் உரிய இலாபவிலை அறிவிக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response