ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ரயில்வே அறிவிப்பால் மக்கள் அச்சம்

நாடு முழுவதும் 3 ஆவது கட்ட ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11 ஆம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம்,வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து வேறு மாநிலங்களுக்கும் மே 12 முதல் தொடர்வண்டிச் சேவை தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்திற்கு மே 31 வரை விமான சேவையும்,தொடர்வண்டிச் சேவையும் தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, 5 ஆவது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4 ஆம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4 ஆம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளார். அதில், பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை இரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்கள், மெயில்/விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் ஆகிய அனைத்து வகையான ரயில்களின் இயக்கமும் மறு உத்தரவு வரும் வரை இரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலான பயணச்சீட்டு முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டு, அதற்கான முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை இரத்து செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது மூலம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Response