ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் 10 ஆயிரம் உட்பட 11 கோரிக்கைகள் – பெ.மணியரசன் தீர்மானம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை – காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, பழ.இராசேந்திரன், நா.வைகறை, கோ.மாரிமுத்து, க.முருகன், இரெ.இராசு, க.விடுதலைச்சுடர், ம.இலட்சுமி, தை.செயபால், மு.தமிழ்மணி, முழுநிலவன் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக மூ.த.கவித்துவன், வே.க.இலக்குவன், பூதலூர் தென்னவன், தருமபுரி விசயன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

இந்திய அரசே, தமிழ்நாடு அரசே! பேரிடர் துயர் துடைப்புப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்துக!

கொரோனா நச்சுயிரி பெருந்தொற்று காரணமாக உலகையே உலுக்கிவரும் கோவிட் – 19 நோய், அன்றாடம் அதிர வைக்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக மக்கள் முற்றிலும் முடங்கியிருக்கிறார்கள். இந்த முழு முடக்கம் 2020 மே 3 வரை தொடர வேண்டிய நிலை இருக்கிறதென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நீண்டகால முடக்கம் மக்களின் சமூக – பொருளியல் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. உழைப்பாளர்கள், உழவர்கள், சிறுதொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் இந்த முடக்கத்திற்குப் பிறகு புது தொடக்கம் காண வேண்டிய நிலை இருக்கிறது. பெருமளவு அரசு நிதி உதவி இல்லையென்றால், இவர்களை மீட்க முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், இந்தியாவும் முடங்க நேரிடும்!

எனவே, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கீழ்வரும் வகையில் மீட்பு செயல்பாட்டில் இறங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

1.குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000 ரூபாய் என்ற வகையில் ஏப்ரல், மே, சூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் வழங்க வேண்டும். இத்தொகையினை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அவரவர் நியாய விலைக் கடைகளின் வழியாக வழங்கலாம். வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் வழியே அவர்கள் இல்லத்திற்கே சென்று உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.தமிழ்நாடு அரசு ஏப்ரல் – மே மாதங்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை விலையில்லாமல் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் சூன் மாதத்தில் மானிய விலையில் இன்றியமையாப் பொருட்கள் அனைத்தும் ரேசன் கடைகளின் வழியாக வழங்க வேண்டும்.

3.உழவர்கள் தங்கள் வேளாண் பணிகளைச் செய்வதற்கு ஆள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோரை, உழவர்களின் வேளாண் பணிகளுக்கும் ஈடுபடுத்தலாம். அவர்களுக்கு அரசு தரும் நாள் ஊதியம் 256 ரூபாயுடன், நில உரிமையாளர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்த்துத் தரும் ஏற்பாட்டைச் செய்யலாம். வேளாண் வேலைகளுக்கு உண்டாகும் ஆள் தட்டுப்பாட்டை இவ்வகையில் தீர்க்கலாம்.

4.வேளாண் விளை பொருட்களுக்கு இந்த நெருக்கடி காலத்தைக் கணக்கில் கொண்டு, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி சாகுபடிச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து, குறைந்தபட்ச இலாப விலை வழங்கவும், வேளாண் விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5.உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் தாராளமாக வேளாண் கடன்கள் வழங்க ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.

6.இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் ஏறத்தாழ 52 இலட்சம் மெட்ரிக் டன் நெல், கோதுமை ஆகிய உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. கோடை காலத்து இருப்பு போக குறைந்தது, 32 இலட்சம் டன் அரிசி, கோதுமை ஆகியவை மிகை உபரியாகத் தேங்கியிருக்கின்றன. இவற்றை மாநில அரசுகளுக்கு இந்த நெருக்கடி காலத்தில் தாராளமாக வழங்காமல், அவற்றைக் கொண்டு, கிருமி நீக்கம் (Sanitizer) தயாரிப்பதற்கு வேண்டிய எத்தனால் தயாரிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது கொடுமையானது!

எத்தனால் தயாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, இன்றைய நிலையில் உணவு தானியங்களை அதற்கு திருப்பிவிடுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மிகை உபரி தானியக் கையிருப்பு அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் விலையில்லாமல் – போக்குவரத்துக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, மாநிலங்களுக்கு வழங்கிவிட வேண்டும்.

7.முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வழியே வழங்கப்படும் கொரோனா துயர்துடைப்பு நிதி, அதில் உறுப்பினர் அட்டை பெற்றிராத முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.குறு, சிறு நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பெற்றுள்ள தொழில் கடன்களுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்துவிட்டு, 4% வட்டியில் தேவையான கடன் வழங்க வேண்டும்.

9.இந்திய அரசின் நிதியமைச்சர் சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தருவதாக அறிவித்திருப்பது முற்றிலும் செயலுக்கு வர முடியாத நிபந்தனைகளுடன் இருக்கிறது. 100 தொழிலாளர்களுக்கும் கீழே பணியாற்றும் சிறு தொழில்களுக்கு ஊதியம் வழங்குவது சரிதான். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் 90 விழுக்காட்டிற்கு மேல் எண்ணிக்கையில் 15,000 மும், அதற்குக் குறைவான மாத ஊதியம் பெறுபவர்களும் இருந்தால்தான் இந்த ஊதிய நிதி கிடைக்கும் என்ற நிபந்தனை ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் தட்டி விடும் செயலாக இருக்கிறது.

எனவே, ஜி.எஸ்.டி. கணக்கில் வரக்கூடிய அனைத்து சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களில் 15,000 ரூபாயும் அதற்குக் கீழும் மாத ஊதியம் பெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த ஊதிய நிதி கிடைக்க தொழிலாளர் துறையின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை அனைத்திற்கும் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி நிதி தேவைப்படக் கூடும். பன்னாட்டுச் சந்தையில் வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை வீழ்ந்துள்ள இச்சூழலில், இந்திய அரசுக்குக் குறைந்தது 3 இலட்சம் கோடி நிதி இதன் மூலம் கிடைத்திருக்கும். எனவே, இப்போதைய நிதித் தேவையை எதிர்கொள்வது இந்திய அரசுக்கு எளிதானதுதான். தேவைப்படும் 6 இலட்சம் கோடி ரூபாயில் குறைந்தது 5 இலட்சம் கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க வேண்டும். மீதித் தொகையை மாநில அரசுகள் வழங்கலாம்.

10.எதிர்பாராத நிலையில், வரலாறு காணாத முறையில் தமிழ்நாடு அரசுக்கும், மற்ற சில மாநில அரசுகளுக்கும் கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நலவாழ்வுத்துறை (Health) செலவினங்கள் பெரிதும் அதிகரித்துவிட்டன. இதை ஈடுகட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இச்சூழலில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாய் இடர்நீக்க நிதியை இந்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையான 12,253 கோடி ரூபாயை தராமல் சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது, நிதி வகையில் தமிழ்நாடு அரசை நிலைகுலையச் செய்யும் சட்டப்புறம்பான நடவடிக்கையாகும். உடனடியாக எந்தத் தாமதமும் இன்றி, தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பங்குத் தொகையை இந்திய அரசு வழங்க வேண்டும்.

11.தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் தமிழ்நாடு அரசிடமே கொரோனா துயர் துடைப்புப் பணிக்கான துயர் துடைப்பு நிதியை வழங்க வேண்டும். கொரோனா துயர் துடைப்புக்காக தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்கள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் நன்கொடை நிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibiilty – CSR) செலவினங்களில் வராது என்ற இந்திய அரசின் அறிவிப்பு, கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாகக் களமாடி வரும் மாநில அரசுகளுக்கு நிதி சேரக் கூடாது என்ற உள்நோக்கத்திலான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு நிதி அளித்து, கொரோனா துயர்துடைப்புப் பணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர,

தீர்மானம் – 2

சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்!

தீர்மானம் – 3

தமிழ்நாடு அரசு வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்!

தீர்மானம் – 4

கொரோனா நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் உரிய மதிப்பு வழங்க வேண்டும்!

தீர்மானம் – 4

கொரோனா கெடுபிடி காலத்திலும் மோடி அரசின் தொடரும் அடக்குமுறை!

தீர்மானம் – 5

இந்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்!

தீர்மானம் – 6

டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக!

ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response