50 விழுக்காடு ஊரடங்கு தளர்கிறது – மத்திய அரசு அறிவிப்பில் தகவல்

கொரோனா பரவல் எதிரொலியாக மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்….

ஏப்ரல் 20 இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஏப்.20 முதல் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்

கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்களுக்குத் தடை தொடரும்

கனரக வாகன பழுது பார்ப்புக் கடைகளைத் திறக்க அனுமதி.

அனைத்து விதமான பயணிகள் போக்குவரத்திற்கும் நாடுமுழுவதும் தடை நீட்டிப்பு.

ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி, நெடுஞ்சாலையோர ஓட்டல்களை திறக்க அனுமதி

ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.

மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது.

ஏப்ரல் 20 முதல் கிராமப் பகுதிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம்

50% தொழிலாளர்களுடன் தேயிலை ஆலைகள் இயங்கலாம்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் பார்த்தால் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் ஐம்பது விழுக்காடு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது என்று தெரிகிறது.

Leave a Response