சீமான் ஏமாற்றினாரா? – சூடான எதிர்வினை

திரைத்துறைக் குழு ஒன்றில்,“சீமான்-ஏமாற்றம் தந்த திரைக்கலைஞன்”
எனும் கட்டுரை ஒன்று பதிவானது.

அதற்கு எதிர்வினையாக இயக்குநர் பாலமுரளிவர்மன் எழுதியுள்ள பதிவு……

வணக்கம் தோழர்!

ஒரு திரை ரசிகராக நல்லதொரு திரைக்கலைஞனை இழந்துவிட்டதற்கான பொருளடக்கம் கொண்டிருக்கும் உங்கள் பதிவின் தலைப்பு நேர்மாறானதாக இருப்பதுபோல் பொருள்படுகிறது.

நான்கு வரிகளில் பதில் எழுத விடாத தலைப்பு. எனவே இயன்றவரை சுருக்கமாக எழுதுகிறேன்.

தலைப்பு தந்த அதிர்ச்சிக்கு அடுத்தது சிறந்த நினைவாற்றல் கொண்ட நீங்கள்
மாபெரும் வெற்றிப்படமான “தம்பி” மிக மோசமான தோல்வியைத் தழுவிய படம் என்று குறிப்பிட்டது.

அப்போது காமராசர் அரங்கத்தில் நடந்த தம்பி திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தான் நடிகர் மாதவன்,
“எங்கள் வெற்றிக்கூட்டணியின் அடுத்த படைப்பின் தலைப்பு “மகிழ்ச்சி”என்று அறிவித்தார்.
அதுவே பிறகு “வாழ்த்துகள்” ஆனது.

நீங்கள் சொல்வது போல“தம்பி” வெறும் அரசியல் பிரச்சாரப்படம் அல்ல.
எது நடந்தாலும் வேடிக்கை பார்க்காதே என்று சராசரி மனிதர்களுக்கு சூடு சொரணை ஊட்டிய மகத்தான படைப்பு.

கருத்துச்சொல்லி படம் எடுத்தோமா பெயர் பணம் புகழ் சேர்த்தோமா என்றில்லாது
நீ கேக்கலன்னாலும் நான் கேட்பேன் என்று களம் வந்த கலைஞனால் எப்படி நீங்கள் ஏமாற்றம் பெற முடியும்.?

பணிகளில் பல வகை. தன்னை வளர்த்தல். மண்ணுக்கும் மக்களுக்கும் பயனாகுதல் என வகைப்படுத்தலாம்.

முதல்வகையே பெரும்பான்மை.ஆனால் எதிரே எது நடந்தாலும் கண்டும் காணாது
தன்னையும் பொருளாதாரத்தையும் வளர்த்துப் பெருக்கிக்கொண்டு பாதுகாப்பானதொரு வாழ்க்கைக்குப்பிறகு பீடத்தில் அமர்ந்தபடி கருத்துச்சொல்லிக்கொள்ளலாம் என்கிற மனநிலை எமக்கு வாய்க்கவில்லை.

அந்த நிலையிலிருந்துதான் சீமான் எனும் சமூக அக்கறையுள்ள,
அவலம் காணச்சகியா கோபம் கொண்ட படைப்பாளியை,
நீங்கள் குறிப்பிட்டதுபோல,
தன் மக்கள் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யத்தெரிந்த திரைக்கலைஞனை காலம் அரசியல் களத்திற்குத் தேர்த்தெடுத்தது.

ஒரு திரைக்கலைஞன் என்பதற்கும் மேலான பெரும் பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டது.
எவரும் எளிதில் சுமந்துவிட முடியாத பொறுப்பு அது.

2006.
ஈழத்தில் இறுதிக்கட்ட இனப்படுகொலை தொடங்கியது.
உள்நாட்டுப் போராகவே பலரும் நினைத்திருந்த காலகட்டம்.

2007 மத்தியில் ஈழ களநிலவரம் அறிந்து பதறி பதட்டத்தோடு இங்கே நாங்கள் அலைந்தோம்.ஏதும் செய்யவழியின்றி பல்வேறு வடிவிலான போராட்டங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன்.

ஈழத்தில் போர் கடுமையாகிறது.இழப்பு அதிகமாகிறது.தமிழக அரசியல் களம் பரபரப்படைகிறது.

“வாழ்த்துகள்” படத்துக்குப்பிறகு 2008ல் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று
கடுமையான போர்ச்சூழலில் ஈழம் சென்றார் அண்ணன் சீமான்.

உயிரோடு திரும்பிவந்ததே பேரதிசயம்.

பிறகு இராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியதற்காக அண்ணன்கள் சீமான்,அமீர் இருவரும் கைதானதை நீங்கள் அறிவீர்கள்.

2009 சனவரியில் தம்பி முத்துக்குமார் இந்த இனத்தின் தலையில் நெருப்பு வைத்தான்.

2009 மே .
இந்தியா பன்னாட்டுச்சதியோடு இணைந்து இனத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்தது.

சிறுவயதில் இருந்தே உப்புப்போட்டு சாப்பிட்டதால் எங்களால்,

“வாங்க வேலையைப் பார்ப்போம்,மக்களுக்கு மட்டும் புத்தி சொல்லி படமெடுத்துக் கல்லா கட்டுவோம்”
என்று திரும்பிவர முடியவில்லை.

கண்மூடினால் பிணக்குவியல்.கதறல்.அழுகை.ஓலம்.

அக்கறையுள்ள அசலான கலைஞன் இயல்பு மாறாத உண்மை மனிதன் என்ன செய்வானோ அதைத்தான் அண்ணன் சீமான் செய்தார்.

ஆனால் அது எல்லாக் கலைஞர்களாலும் எல்லா மனிதர்களாலும் செய்துவிடமுடியாதது.

அதனால் தான் இரண்டு முறை அவர்மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

வேடிக்கை பார்ப்பவர்களும் விமர்சிப்பவர்களும் நினைப்பது போல எளிதானது அல்ல அரசியல் களம்.
அதுவும் வழக்கமான பாதையிலிருந்து மாறுபட்டு பயணிப்பது மிகவும் சவாலானது.

உங்கள் பதிவில் நீங்கள் அரசியல் விமர்சனம் செய்யவில்லை. எனினும் இன்னொரு தளத்துக்குச் சென்று தனியாக துணிந்துப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் பற்றி எழுதும்போது எல்லாக்கோணங்களையும்
கவனத்தில் கொள்ளவேண்டும்.பர்மா நண்பர்களுடன் பேசியதுபோன்ற தொனி எழுத்தில் வருவது ஏற்புடையதல்ல.

அரசியலுக்கு வராத ஒருவரை “வா!வா! என்பதும் அவர் வருவதாகச் சொல்லாத காலத்திலிருந்தே எப்போது வருவீர்கள் என்று கேட்டதுமான ஊடக நோய்க்கு நிகரானது,தீவிர அரசியல்களத்தில் தீர்வு தரும் அரசியலை முன்வைக்கும் ஏன் படமெடுக்காமல் ஏமாற்றினாய் என்பதும்?

இரண்டு மனநிலையுமே வேறுவேறு அல்ல. அரசியல் உள்நோக்கம் கொண்டது.
உங்களை அறியாமலே ஓர் எழுத்தாளர் மற்றும் ்திரைப்படநேசராக மட்டும் யோசித்து எதிர் அரசியலுக்கு இடமளித்திருக்கிறீர்கள்!ஆனால் நீங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரானவர் அல்ல என்பதை நான் அறிவேன்.

தனக்கு என்ன நேர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதையே உணராத பெரும்பான்மையும் இன எழுச்சி அரசியலின் வலிமை உணர்ந்த இன எதிரிகளும் உள்ள களத்தில் பெரும் நம்பிக்கை விதைத்தவர் அண்ணன் சீமான்.

திரைத்துறையில் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு இன்றைய நிலையில் பலரும் படம் இயக்குகிறார்கள்.
புதிதாகப் பலரும் வருகிறார்கள்.

தமிழினத்தைச் சூழ்ந்திருக்கும் கேடுகளை, பூவுலகு எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தை உயிரைக்கொடுத்துப் பேச நாளைய தலைமுறைக்குக் கற்பிக்க யார் இருக்கிறார்கள்.?

அங்கே இனப்படுகொலை நடக்கும்போது கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்துவிழுந்தபோது
பெண்கள் குழந்தைகள் துண்டு துண்டாக்கப்பட்டபோது, “கிரிக்கெட் ஸ்கோர்”பற்றி மிகுந்த கவலையோடு ட்வீட் செய்துக்கொண்டிருந்த திரைக்கலைஞர் பலகோடிகளில் ஊதியம் பெறுகிறார்.பல தயாரிப்பு நிறுவனங்களை மூடினாலும் பிரம்மாண்ட இயக்குனராக ஊடகங்களால் கொண்டாடப்படுகிறார்.

அத்தகையோர் மலிந்த திரைத்துறையின் ஒரு கலைஞனாக மட்டும் அண்ணன் சீமானை அளவிடமுடியாது.

உலகம் சுற்றி படம் எடுப்பவர்களை விட உலகத்தமிழர்களிடம் நம்பிக்கையை விதைத்தவரே உயர்ந்தவர்.

கலை இலக்கியத்தின் பணி மக்களை விழிப்புறச்செய்வது.அதைச்செய்பவரை ஏமாற்றம் தந்தவர் என்று எப்படி சொல்லமுடியும்?

உவத்தல் காய்த்தல் இல்லா அரசியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

அண்ணன் சீமானின் வருகை தமிழக அரசியலின் போக்கை மட்டுமல்லாது தென்னிந்திய அரசியலிலும்
இந்திய தேசிய இனங்களுக்கிடையேயும் பல ஆக்கப்பூர்வமான மாறுதல்களை நிகழ்த்தியுள்ளது.
இன்றைக்கு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டாலும் எதிர்காலம் அதைப் பதிவு செய்தே தீரும்.

இப்போதும் கூட அண்ணன் சீமான் படம் இயக்கமுடியும்.
அவரது கலைஆளுமை குறித்து மிகநுட்பமாகப் பதிவுசெய்திருக்கும் நீங்களும் அறிவீர்கள்.

ஆனால், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு மொழி இனம் நிலம் வளம் நலம் காக்கும் அரசியல் படைக்க யாரேனும் ஒருவரை ஒரே ஒரு திரைக்கலைஞரை அடையாளம் காட்டமுடியுமா நாம்?

அண்ணன் சீமான் இப்போதும் படம் இயக்க முடியும்! அவர் செய்யும் பணியை யார் செய்யமுடியும்???

-பாலமுரளிவர்மன்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response