பசிக்கொடுமையால் 2 மாத ஆண்குழந்தையை தெருவில் விட்டுப்போன பெண் – மக்கள் அதிர்ச்சி

சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் முன் சக்கரத்தின் கீழ் துணியால் சுற்றப்பட்ட கைக்குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்த சாஸ்திரிநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விமலா உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து பசியால் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டுள்ளார். பின்னர் விசாரணையில் பிறந்து 2 மாதங்களேயான ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.குழந்தை சுற்றப்பட்டிருந்த துணியில் ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் மீட்டனர்.

அந்தக் கடிதத்தில்…

என்ன மன்னிச்சிடுங்க. இந்தக் குழந்தையை என்னால பாத்துக்க முடியல. பாத்துக்குற அளவுக்குப் பணம் இல்ல. ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வேலை இல்லாம கஷ்டப்படுறேன். என் பிள்ளையை நல்லா பாத்துக்கங்க. என் பிள்ளைய எங்கவிட்டுட்டுப் போறதுன்னு தெரியாம இங்க விட்டுட்டுப் போறேன். பத்திரமா பாத்துக்கோங்க. மதபோதகர் கிட்ட சொல்லி குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க. குழந்தை இல்லாதவங்க கிட்ட கொடுத்துடுங்க. என்ன மன்னிச்சிடுங்க

என உருக்கமாக எழுதி இருந்தது.

பின்னர், சாஸ்திரி நகர் உதவி ஆய்வாளர் விமலா உயரதிகாரிகளுக்குத் தகவல் கூறி குழந்தையைக் காவல் நிலையம் எடுத்து வந்துள்ளார். குழந்தையின் பசிக்குப் பால் கொடுக்கப்பட்ட பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்து அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தின் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் நேற்றிரவு காவல் நிலையம் வந்து குழந்தையைப் பெற்று காப்பகத்தில் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்த மேல் விசாரணையில் ஒரே ஒரு காவல்துறை சிசிடிவி கேமராவில் ஒரு பெண் துணியால் தலையை மறைத்தபடி குழந்தையை வைத்து விட்டுச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Response