கமலை விமர்சித்த பாண்டே கடுமையாக எதிர்வினையாற்றிய ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். அதுகுறித்து ரங்கராஜ் பாண்டே செய்த விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா ஆற்றியுள்ள எதிர்வினை…..

தமிழராக இல்லாத போதும் தெளிவான தமிழில் தந்தி தமிழ்த் தொலைக்காட்சியின் நெறியாளராக… உங்கள் மீது எனக்கு மரியாதை அதிகம். இப்படித்தான் நானும் இந்தக் கடிதத்தைத் துவங்கியிருக்கவேண்டும்.

உண்மையில் எப்போதும் எனக்குக் கோபம் உண்டு.கேள்வி கேட்கும் இடத்தில் அமர்ந்திருப்பவர்தான் அறிவாளி,பதில் சொல்லும் இடத்தில் அமர்ந்திருப்பவர் அறிவற்றவன் போல், கேள்வியைக் கேட்டுவிட்டு பதில் சொல்ல விடாமல் தொடர்ந்து இடைமறிக்கும் பண்பை பழக்கத்தில் கொண்டுவந்தவர் நீங்கள் என்பதால்.

கேள்வி கேட்பவர் புத்திசாலி என்றால் பதில் சொல்ல அமர்ந்திருப்பவரும் புத்திசாலி என்று மதிப்பவன் தான் உண்மையான அறிவாளி.சரி…

நம் பாரதப் பிரதமருக்கு எம் தலைவர் எழுதிய கடிதத்துக்கு உங்கள் விமர்சனம் பார்த்தேன்.நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறிக்கவோ தடை விதிக்கவோ யாரும் இல்லாதது உங்களுக்கு மிக செளகரியம்.சும்மாவே ஆடுபவருக்கு சலங்கை கட்டிவிட்டால்? ஜனக் ஜனக் பாயல் பாஜேதான்… மூச்சுவிடாமல் பேசுகிறீர்கள்?

பேட் பண்ண ஆள் இல்லாத போது பால் போட்டுவிட்டு அவுட் என்று கத்துவது போல் உள்ளது.

உங்களுக்கு எப்போதுமே நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்ற ஒரு மனப்பான்மை.உங்கள் Statistical கேள்விகளுக்குப் பலர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு உங்களிடம் சில கேள்விகள்…

1.சுனாமியைப் போல் கொரொனாவும் ஓர் காலையில் திடீரென்றுதான் நம் நாட்டிற்குள் வந்ததா?

2.பிரதமர் அவர்கள் தமிழில் வந்த கடிதத்தைத்தான் படித்தாரா? (வாழ்க தமிழ்)

3.நம்மவர் எந்த குடிசை வீட்டில் வாழ்ந்தார் என்று கேட்டிருக்கிறீர்கள்.குடிசையில் வாழ்கின்றவர்களின் மனதில் வாழ்கிறார்.அந்த எளிய மக்களுக்காகக் குரல் கொடுப்பார்.நாட்டிற்கு முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கின்றீர்கள்.அதற்கு விடை கிடைத்துவிட்டால் கொரோனாவிற்கு தீர்வு கிடைத்துவிடும் போலும். அவர் வீட்டில் பால்கனி இல்லையா? என்பது.

4.அந்த மாதிரி பத்திரிகைகாரன் நான் இல்லை, இந்த மாதிரி பத்திரிகைகாரன் நான் இல்லை என்று நீங்களே பெருமைப்பட்டுக் கொள்வது வேடிக்கை.இதர்குப் பெயர் தன்னடக்கமா?

5. உங்கள் கூற்றுப்படி உலக அதிசயத்தில் ஒரு பத்திரிகையாளரான நீங்கள் எப்படி கமா மற்றும் முற்றுப்புள்ளி எதுவும் வைக்காது ஒரு பக்கமாகப் பேசினீர்கள்?அது பத்திரிகை தர்மமா?

6.பக்கத்து நாட்டுக்காரன் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பலரை கொரோனா எனும் தொற்றில் தொலைத்துக்கொண்டிருந்த தகவல் நமக்கு தாமதமாகத்தான் வந்ததா? சரி இந்தத் தொற்றிற்கு கோவிட் 19 என்ற பெயர் ஏன் வந்தது? சொல்லுங்கள் பார்ப்போம்.

உங்கள் விமர்சனங்களுக்கு எனக்கும் மூர்ச்சை அடக்கி பதில்வசனம் பேசத்தெரியம். எப்போதும் நீங்களே கேள்வி கேட்டதாக இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி எனக்கு கூலிக்கு மாரடிக்கத்தேரியாது.இனியாவது எதிரில் மனிதரை அமரவைத்து பின் அவரைச் சாடுங்கள்.

இனி ஒரு புது விதி செய்வோம்.தொடர்ந்து கேள்விகள் எழும்.

நன்றி

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response