கொரோனாவால் தூத்துக்குடியில் முதல் இறப்பு நடந்தது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி உயிரிழந்ததாக தமிழக தலைமைச் செயலாளார் நேற்று அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இது முதல் பலி. இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். பணியின் போது பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் மூலம் அவரது மாமியார் அந்தோணியம்மாள் (71) கொரோனா தொற்றுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. மேலும், லேப் டெக்னீசியனாக பணியாற்றும் பெண்ணின் கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதில் அந்தோணியம்மாளுக்கு நேற்று முன்தினம் முதல் உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Leave a Response