மோடியின் செயல் வெட்கக்கேடானது – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு

கொரோனா வைரஸ் போரில் நாம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் ஒருமைப்பாட்டின் குறியீடாகவும் ஞாயிறு இரவு மின்விளக்குகளை அணைத்து விளக்கொளியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பொதுவாக பிரதமர் இது போல் முறையீடு, வேண்டுகோள் விடுக்கும் போதெல்லாம் அதற்கு விளக்கமளிக்க சிலரும் கிண்டல் செய்பவர்கள் சிலரும் என இருவிதமான கருத்துகள் பரவும்.

இப்போது கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியோ, இது ‘பாஜகவின் மறைமுகத் திட்டம்’ என்று புதிய காரணம் ஒன்றைக் கூறி சாடியுள்ளார்.

“பாஜக தொடங்கிய நாளைக் குறிக்கும் விதமாக மறைமுகமாக நாட்டு மக்களை மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி அந்த தினத்தை மக்கள் அனுசரிக்கப் பணிக்கிறாரா நம் பிரதமர்? ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாள், எனவே பிரதமரின் இந்த தீபமேற்று வேண்டுகோளுக்குப் பின்னால் இந்தக் காரணத்தைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்? இதற்கு பிரதமர் விஞ்ஞானப்பூர்வ அறிவார்த்த விளக்கம் அளிக்க முடியுமா? என்று நான் சவால் விடுக்கிறேன்.

ஒரு தேசிய நெருக்கடியை தன்னுடைய ஆளுமையின் விசயமாக மாற்றுவது வெட்கக்கேடு. அதைவிடவும் மோசம் தன் கட்சியின் திட்டத்தை உலகப் பேரிடர் காலத்தில் முன்னெடுப்பது. பிரதமருக்குக் கொஞ்சமாவது உணர்வு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவிட்-19 காய்ச்சல் பரவலுக்கு அரசு என்ன ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது போன்றவற்றைப் பற்றி பேசாமல் அர்த்தமற்ற செயல்களைச் செய்யச் சொல்வதன் மூலம் மக்கள் வெறுப்படைந்ததுதான் மிச்சம் என்றார் தேவேகவுடா.

தமிழகத்தில், விளக்கு ஏற்ற மாட்டோம் என்கிற குறிச்சொல்லை உருவாக்கி அதன்மூலம் மோடியின் திட்டத்துக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Response