நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா? என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பிரபலங்களும் இந்த நெருக்கடியைச் சமாளிக்க நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் முதல் நபராக பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளித்தார். தற்போது ரத்தன் டாடா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் 500 கோடி ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பதிவில், “நாம் ஒரு மனித இனமாக எதிர்கொள்ளவிருக்கும் மிகக் கடினமான சவால்களில் ஒன்றாக கோவிட்-19 இருக்கும். இதற்கு முன் தேசத்துக்குத் தேவை இருக்கும் போது டாடா ட்ரஸ்ட்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் அதற்குப் பங்காற்றியுள்ளன. முன்னெப்போதும் விட இந்தத் தருணத்தில் களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகம் இருக்கிறது” என்று பதிவிட்டுக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

டாடா ட்ரஸ்ட்ஸ் சார்பில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“இந்தியா மற்றும் உலக அளவில் இப்போது சூழல் மிகவும் கவலைக்குரியதாகவும், அதற்கு உடனடி நடவடிக்கையும் தேவையாயிருக்கிறது. இதற்கு முன் தேசத்துக்குத் தேவை இருக்கும்போது டாடா ட்ரஸ்ட்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் அதற்குப் பங்காற்றியுள்ளன. முன்னெப்போதும் விட இந்தத் தருணத்தில் களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகம் இருக்கிறது.

இப்படி ஒரு கடினமான சூழலில், கோவிட்-19 பிரச்சினையை எதிர்க்கத் தேவையான அவசரத் தேவைகள் உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது. இது மனித இனம் இதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும். இன்று டாடா ட்ரஸ்ட்ஸ் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும் 500 கோடி ரூபாயைத் தருகிறது.

* களத்தில் முன்னால் நிற்கும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்

* அதிகரித்து வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை தர சுவாச உதவிக்கான உபகரணங்கள்

* பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பரிசோதனைக் கருவிகள்

* பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மாதிரி சிகிச்சை வசதிகள்

* துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பயிற்சி மற்றும் அறிவூட்டுதல்

இந்தச் சூழலை எதிர்கொள்ள, ஒரு ஒன்றிணைந்த பொதுச் சுகாதார ஒத்துழைப்புத் தளத்தில், டாடா ட்ரஸ்ட்ஸ், டாடா சன்ஸ், டாடா குழும நிறுவனங்கள், இந்த நோக்கத்துக்காக இணைந்துள்ள மற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும், அரசாங்கத்துடன் கை கோக்கிறது. இந்தத் தளத்தில் இருப்பவர்கள் சமூகத்தில் பின் தங்கிய, வறுமையில் வாடுபவர்களைச் சென்றடையத் தொடர்ந்து பணியாற்றும்.

இந்தத் தொற்றை எதிர்த்துப் போராட உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம், அவர்கள் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறோம்”

இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

Leave a Response