ரஜினி தன் ரசிகர்களைத் திருத்த வேண்டும் – தமிழ்நாடு வெதர்மேன் காட்டம்

வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3 ஆம் கட்டநிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தத் தகவல் உண்மைத்தகவல் அல்ல என்பதால், ட்விட்டர் தளம் தங்களுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்கிவிட்டது. மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான் பேசியதிற்கான லிங்க்கையும் ரஜினி கொடுத்திருந்தார். அந்த ட்வீட்டையும் நீக்கிவிட்டது ட்விட்டர் தளம். இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் ட்விட்டருக்கு எதிரான குறிச்சொற்களைப் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நல்ல எண்ணத்தில் ரஜினிகாந்த் அந்த வேண்டுகோளை வெளியிட்டு இருந்தாலும், பொய்ச்செய்தியாகவே அதைக் கருத வேண்டும். ஏனெனில், ரஜினி போன்ற பிரபலமான நட்சத்திரங்கள் இதுபோன்ற கருத்தை வெளியிடும்போது காட்டுத்தீயாக பரவும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கருத்துத் தெரிவித்திருந்தார்.

12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் அழிந்துவிடும் என்பது உண்மைக்கு மாறானது என்றும் உலகில் எங்குமே ஆய்வு ரீதியாக அது நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறி இருந்தார். மேலும், ரஜினியின் பதிவை நீக்கியதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் விரைந்து பணியாற்றியதற்காக ட்விட்டரைப் பாராட்டிய அவர், ரஜினி போன்ற நட்சத்திரங்கள் ஒரு செய்தியைப் பகிரும் முன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தன்னார்வ வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜானின் பதிவு, ரஜினி ரசிகர்களை கோபமூட்டிவிட்டது.சமூக வலைதளங்களில் அவரை தரக்குறைவாகப் பேசினர். “ஒரு தவறை, தவறு என பகிரங்கமாகச் சொன்னேன். அதற்காக, ரஜினி இரசிகர்கள் சிலர் என் மீது திமுக முத்திரையைக் குத்திவிட்டனர். மேலும் என மதத்தைச் சொல்லியும் அவதூறு செய்கின்றனர். சகிப்புத்தன்மை என்றால் என்பதை ரஜினி, தனது ரசிகர்களுக்கு முதலில் சொல்லித் தரட்டும்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு நல்லது செய்வதைவிட, தீங்கையே செய்கின்றனர் என்றும் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் பிரதீப் ஜான்.

Leave a Response