அனைத்துக்கட்சித் தலைவர்கள் அஞ்சலி – கண்ணீர் மழையில் க.அன்பழகன் இறுதி நிகழ்வுகள்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (வயது 98), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 1 மணியளவில் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்ட சாலையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. அவருடைய உடலில் தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அன்பழகன் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, மருமகன் சபரீசன், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்கரபாணி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அருள்நிதி, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆற்காடு வீராசாமி, மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ் ராஜன் மற்றும் தி.மு.க. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரசு முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி,

தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.என்.ராஜா, கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜி.சுரேஷ்கர்ணா, முன்னாள் அமைச்சர்கள் எச்.வி. ஹண்டே, அரங்கநாயகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் டாக்டர் ஈ.எஸ்.எஸ்.ராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்,

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் தனியரசு எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ந.சேதுராமன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வேணுகோபால்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சத்யராஜ், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, பவர் ஸ்டார் சீனிவாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை குஷ்பு,கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம் உள்பட ஏராளமானோர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் அன்பழகன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவரது இறுதி ஊர்வலம் மாலை 4.17 மணிக்குத் தொடங்கியது. வாகனத்தில் அன்பழகனின் மகன் அன்புசெல்வன், சகோதரர் ஆனந்த், பேரன் வெற்றி அழகன், கொள்ளுப்பேரன் கதிர் ஆனந்த் ஆகியோர் இருந்தனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். துக்கம் அனுசரிக்கும் வகையில் அனைவரும் தங்கள் சட்டையில் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்திருந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்ற அவரது இறுதி ஊர்வலம் நியூ ஆவடி சாலை வழியாக சென்று மாலை 5.13 மணியளவில் அயனாவரம் வேலங்காடு மாநகராட்சி மயானத்தை அடைந்தது.

அங்கு க.அன்பழகன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இறுதிச் சடங்குகளை அவரது மகன் அன்புசெல்வன் செய்தார். அதனைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட்டது.

கட்சி வேறுபாடு கடந்து எல்லாத் தலைவர்களும் கண்ணீருடன் கலங்கிய நிகழ்வு எல்லோரையும் நெகிழ வைக்கும் வண்ணம் இருந்தது.

Leave a Response